விபத்தை ஏற்படுத்திய கர்நாடக அரசு பஸ் டிரைவர் கைது
ராய்ச்சூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த வழக்கில், கர்நாடக அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ரேடியம் ஸ்டிக்கர் மூலம் துப்பு துலக்கி போலீசார் அவரை பிடித்துள்ளனர்.
ராய்ச்சூர்: ராய்ச்சூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 2 வாலிபர்கள் உயிரிழந்த வழக்கில், கர்நாடக அரசு பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ரேடியம் ஸ்டிக்கர் மூலம் துப்பு துலக்கி போலீசார் அவரை பிடித்துள்ளனர்.
2 வாலிபர்கள் சாவு
ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கரடகல் கிராமத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ்(வயது 27), தேவராஜ் (26). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதி இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். லிங்கசுகுர்-கலபுரகி தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி 2 பேரும் பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து லிங்கசுகுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விபத்து நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அரசு பஸ்சின் முன்பகுதியில் பொருத்த கூடிய ரேடியம் ஸ்டிக்கர் கிடந்தது. அந்த ரேடியம் ஸ்டிக்கரை வைத்து விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை போலீசார் தேடினர்.
2 ஆயிரம் கிலோ மீட்டர்
அதாவது ராய்ச்சூர், லிங்கசுகுர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்ற போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களில் ரேடியம் ஸ்டிக்கரை பொருத்தி பார்த்தனர். ஆனால் எந்த பஸ்சுக்கும் அந்த ரேடியம் ஸ்டிக்கர் பொருந்தவில்லை. பின்னர் சித்ரதுர்கா, துமகூரு, பாகல்கோட்டை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழக பணிமனைகளுக்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
அதாவது சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். 25 போக்குவரத்து கழக பணிமனைகளில் விசாரணை நடந்து இருந்தது. 7 ஆயிரம் பஸ்களில் அந்த ரேடியம் ஸ்டிக்கர்களை போலீசார் பொருத்தி பார்த்தனர். ஆனால் எந்த பஸ்சிலும் அந்த ஸ்டிக்கர் பொருந்தவில்லை. இந்த நிலையில் ராய்ச்சூரில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
டிரைவர் கைது
அப்போது சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரேயில் உள்ள சோதனை சாவடியை கடந்த கர்நாடக அரசு பஸ்சின் முன்பகுதியில் ரேடியம் ஸ்டிக்கர் இல்லாமல் இருந்ததை போலீசார் பார்த்தனர். பின்னர் அந்த பஸ் திரும்பி வந்த காட்சிகளை ஆய்வு செய்த போது பஸ்சின் முன்பகுதியில் ரேடியம் ஸ்டிக்கர் பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் அந்த பஸ் லிங்கசுகுர் போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சம்பவத்தன்று பஸ்சை ஓட்டிய டிரைவரான நாகய்யா என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் விபத்தை ஏற்படுத்தியதை ஒப்புக்கொண்டார். இதனால் அவரை போலீசார் கைது செய்தனர்.
விபத்து நடந்ததும் பயந்து போன நாகய்யா பஸ்சை பெங்களூரு கெங்கேரியில் உள்ள வாகன பணிமனைக்கு கொண்டு சென்று டிங்கரிங் வேலை செய்து ரேடியம் ஸ்டிக்கரை பொருத்தி பெயிண்ட் அடித்ததும் விசாரணையில் தெரியவந்து உள்ளது. கைதான நாகய்யா மீது லிங்கசுகுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story