புலியை பிடிக்க வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது
சாம்ராஜ்நகர் அருகே புலியை பிடிக்க வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கி உள்ளது. கடந்த 10 நாட்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளது.
கொள்ளேகால்: சாம்ராஜ்நகர் அருகே புலியை பிடிக்க வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கி உள்ளது. கடந்த 10 நாட்களில் 3 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளது.
புலி அட்டகாசம்
சாம்ராஜ்நகர் தாலுகாவில் அரக்கலவாடி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதன்காரணமாக அரக்கலவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சிறுத்தை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் அட்டகாசம் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அரக்கலவாடி கிராமத்தில் புலி ஒன்று முகாமிட்டு கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதுவரை 12-க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி வேட்டையாடி கொன்றுள்ளது.
புலியை, கிராம மக்கள் பார்த்துள்ளனர். இதனால் பீதியடைந்த கிராம மக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் புலியை பிடிக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதன்படி அரக்கலவாடி கிராமத்தை சேர்ந்த உதய் என்ற விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் புலியை பிடிக்க இரும்பு கூண்டுகள் வைத்தனர்.
சிறுத்தை சிக்கியது
ஆனால் புலியை பிடிக்க வைத்த இரும்பு கூண்டுகளில் இதுவரை 2 சிறுத்தைகள் சிக்கி உள்ளன. அந்த சிறுத்தைகள் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. ஆனால் புலி இதுவரை அந்த கூண்டில் சிக்கவில்லை. இதனால் புலியை பிடிக்க அந்தப்பகுதிகளில் தொடர்ந்து இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்த வந்த ஒரு சிறுத்தை அந்த கூண்டில் சிக்கியது. இதனை அறிந்ததும் வனத்துறையினர் கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அதனை பந்திப்பூர் வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.
புலியை பிடிக்க வைத்த கூண்டில் இதுவரை 3 சிறுத்தைகள் சிக்கி உள்ளன. ஆனால் புலி மட்டும் சிக்கவில்லை. புலி பிடிபடாமல் இருப்பதால் அந்தப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள்.
10 நாட்களில் 3 சிறுத்தைகள்
இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், புலியை பிடிக்க அரக்கலவாடி பகுதியில் இரும்பு கூண்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் இதுவரை அந்த கூண்டுகளில் புலி சிக்கவில்லை. புலியை பிடிக்க வைத்த கூண்டில் சிறுத்தைகள் சிக்கி உள்ளன. கடந்த 10 நாட்களில் 3 சிறுத்தைகள் கூண்டில் சிக்கி உள்ளன. ஆனாலும் புலியை பிடிக்க அந்தப்பகுதியில் கூண்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story