நெல்லையில் பரபரப்பு 6 பெண்களை மணந்த ‘கல்யாண மன்னன்’ கைது உடந்தையாக இருந்த 2 பேரும் சிக்கினர்


நெல்லையில் பரபரப்பு 6 பெண்களை மணந்த ‘கல்யாண மன்னன்’ கைது உடந்தையாக இருந்த 2 பேரும் சிக்கினர்
x
தினத்தந்தி 30 Nov 2021 8:58 PM GMT (Updated: 30 Nov 2021 8:58 PM GMT)

6 பெண்களை மணந்த கல்யாண மன்னன் கைது

நெல்லை:
6 பெண்களை மணந்த ‘கல்யாண மன்னன்’ நெல்லையில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரும் சிக்கினர்.
கணவன்-மனைவி
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் பாஸ்கர் (வயது 40). இவருக்கும், நெல்லை பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 
திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்த சில மாதங்களில் வின்சென்ட் பாஸ்கர் நகையை விற்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கல்யாண மன்னன்
இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், 6-வதாக பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த ‘கல்யாண மன்னன்’ என்பதும் தெரியவந்தது. மேலும் கோவில்பட்டியில் உள்ள தனது 4-வது மனைவி வீட்டில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தனிப்படை அமைத்து வின்சென்ட் பாஸ்கரை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படையினர் வின்சென்ட் பாஸ்கர், மற்றும் அவருக்கு உடந்தையாக உறவினா் என்று கூறி நடித்த சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்த பிளாரன்ஸ் (58), சுவிசேஷபுரம் பகுதியைச் சேர்ந்த தாமரைச் செல்வி (56) ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று நெல்லையில் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள திருமண புரோக்கர் இன்பராஜை வலைவீசி தேடி வருகின்றனர்.
பரபரப்பு
இந்த சம்பவத்தில் கைது ெசய்யப்பட்ட 3 பேரும் ஒவ்வொரு திருமணத்தின்போது, வெவ்வேறு பெயர்களை கூறியும், ஊர்களை மாற்றிச் சொல்லியும் ஏமாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  
6 பெண்களை மணந்த ‘கல்யாண மன்னன்’ நெல்லையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story