குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது: நெல்லை டவுனில் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள் பழையபேட்டை இணைப்பு சாலை துண்டிப்பு


குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்தது: நெல்லை டவுனில் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள் பழையபேட்டை  இணைப்பு சாலை துண்டிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 2:47 AM IST (Updated: 1 Dec 2021 2:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் வெள்ளத்தில் தத்தளிக்கும் குடியிருப்புகள்

பேட்டை:
குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் நெல்லை டவுனில் குடியிருப்புகள் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. பேட்டை-பழையபேட்டை இணைப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
குளங்கள் நிரம்பின
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், கருவேலங்குளம், மரைக்காயர் குளம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்கிறது. இதில் வாகைகுளம் நிரம்பி தண்ணீர் அதிகமாக பாய்வதால் வாகைகுளம் மெயின் ரோடு முழுவதுமாக தண்ணீர் ஆறாக ஓடியது. இந்த தண்ணீர் அருகில் வயல் பகுதியில் பாய்ந்து சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன், மாநகராட்சி அதிகாரி பைஜூ உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையின் இருகரைகளையும் வாறுகால் தோண்டி தண்ணீர் செல்வதற்கு வழி ஏற்படுத்தினர். 
சாலை துண்டிப்பு
மேலும் திருப்பணிகரிசல் குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களும்  நிரம்பி வழிவதால் அந்த வெள்ளமானது பேட்டை -பழையபேட்டை இணைப்பு சாலையான வெள்ளோடை முழுவதுமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பேட்டை, பழையபேட்டை இணைப்பு சாலையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.
இணைப்பு சாலை வழியாக ஓடும் தண்ணீரில் அப்பகுதி சிறுவர்கள் ஆபத்தை உணராமல் குளித்தனர்.
வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
இந்த தண்ணீர் நெல்லை கண்டியப்பேரி குளம் வழியாக நிரம்பி டவுன் வழுக்கோடையில் பாய்ந்தது. ஆனால் அந்த பகுதியில் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு இருந்ததால் தண்ணீர் டவுன் காட்சி மண்டபம் அருகில் வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் பாய்ந்தது.
இதனால் டவுன் காட்சி மண்டபம் பகுதி குளம்போல் காட்சி அளிக்கிறது. அருகில் உள்ள தெருக்களுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து காட்சி மண்டபம் வழியாக போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
100 ஆண்டு ஆலமரம் சாய்ந்தது
நெல்லை கோடீஸ்வரன் நகர்- சேரன்மாதேவி ரோட்டில் சாலையோரத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருந்தது. போக்குவரத்து வசதிக்காக இந்த மரத்தின் விழுதுகள் ஏற்கனவே வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று அதிகாலை 5 மணி அளவில் ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் சாலையின் குறுக்காகவும், அங்கு இருந்த டிராக்டர் மீதும் விழுந்தது. மேலும் ரோட்டில் இருந்த மின்கம்பிகள் மீது விழுந்ததால் அங்கு இருந்த மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா மற்றும் தீயணைப்பு வீரர்கள், பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வாகனங்களை பேட்டை, குன்னத்தூர், டவுன், வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இந்த சம்பவத்தால் காலை நேரத்தில் கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். 
மின்வாரிய அதிகாரி ஆய்வு
மேலும் மின்வாரிய உதவி பொறியாளர் சரவணன் மற்றும் மின் பணியாளர்கள் சாய்ந்து கிடந்த மின்கம்பங்களை சரி செய்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மின்இணைப்பை சரிசெய்து, மின் வினியோகம் வழங்கினர்.
இந்த பணியை நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் குறுக்குத்துறை, நத்தம் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள இடங்களை ஆய்வு செய்து, மின் கம்பங்களில் மின்வினியோகத்தை நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த ஆய்வு பணியில் உதவி செயற்பொறியாளர்கள் சங்கர், தங்க முருகன், ஷாஜகான் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story