மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: குற்றாலத்தில் தொடர் வெள்ளப்பெருக்கு மெயின் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்


மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: குற்றாலத்தில் தொடர் வெள்ளப்பெருக்கு  மெயின் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
x
தினத்தந்தி 1 Dec 2021 2:55 AM IST (Updated: 1 Dec 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் தொடர் வெள்ளப்பெருக்கு

தென்காசி:
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்
வடகிழக்கு பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் கடந்த 28-ந் தேதி குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் செம்மண் நிறத்தில் தண்ணீர் சென்றது.
நேற்று முன்தினம் அருவியில் சற்று தண்ணீர் வரத்து குறைந்தாலும் பாதுகாப்பு வளைவை தாண்டி வெள்ளம் சென்றது. ஆனால், நேற்று குற்றாலம் மெயின் அருவியில் தொடர்ந்து 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளையை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டுகிறது. மற்ற அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று காலையில் இருந்தே தென்காசி, குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. வெயில் இல்லை.
விளைநிலங்களில்              தண்ணீர் புகுந்தது
மேலும், பலத்த மழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்களும் நிரம்பி வழிகிறது. நேற்று முன்தினம் பழைய குற்றாலம் அருவியில் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அருவி தண்ணீர் மூலமாக செண்பகராமபேரி குளம், மத்தளம்பாறை குளம், செங்குளம், அருதன்குளம் உள்ளிட்ட 28 குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்மூலம் சுமார் 1,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த நிலையில் அருதன்குளத்திற்கு செல்லும் நீர்வழி பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் மத்தளம்பாறை அருகே உள்ள கண்டமங்கலம் விலக்கு பகுதியில் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் சாலைகளிலும், விளைநிலங்களிலும் புகுந்தது.
இழப்பீடு வழங்க கோரிக்கை
மத்தளம்பாறை பகுதிகளில் நெல் நாற்று நட்டு 5 நாட்களே ஆன நிலையில் இந்த தண்ணீரில் அவை முழுவதுமாக மூழ்கின. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிர்கள் அழுகும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story