திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 1,400 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்


திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 1,400 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்
x
தினத்தந்தி 1 Dec 2021 1:27 PM IST (Updated: 1 Dec 2021 1:27 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 1,400 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறி இருக்கிறார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. 2021-2022-ம் ஆண்டுக்கான ஊரக பகுதிகளில் வசிக்கும் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 388 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், கடம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 100 பயனாளிகள் வீதம் ஆயிரத்து 400 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எனவே ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அந்த பகுதியில் உள்ள கால்நடை மருந்தகங்களில், கால்நடை உதவி டாக்டர்களிடம் வருகிற 9-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பிப்பவர்கள் கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த திட்டம் முழுக்க முழுக்க பெண்களுக்கானது. அதுவும் மிக வறுமையில் உள்ள பெண்களுக்கானது. ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மட்டும் தகுதியானவர்கள்.

வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் பெறும் பயனாளிகள் சொந்த நிலமற்றவராக இருக்கவேண்டும். பயனாளி நிரந்தரமாக அந்த கிராமத்தில் குடியிருப்பவராக இருக்கவேண்டும். பயனாளி கறவை பசு, ஆடு ஏதும் சொந்தமாக வைத்திருக்க கூடாது. பயனாளி அரசின் இலவச திட்டத்தில் ஏற்கனவே பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது. பயனாளி அல்லது அவரது கணவர், தந்தை, தாய், மாமனார், மாமியார், மருமகள், மகன், மகள் யாரும் மத்திய, மாநில அரசு பணியாற்றுபவராகவோ, பஞ்சாயத்து, கூட்டுறவு ஊழியராகவோ இருக்கக்கூடாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story