மக்காத குப்பையில் இருந்து பொருட்களை தரம் பிரித்து சேகரிக்கும் பணி
மக்காத குப்பையில் இருந்து பொருட்களை தரம் பிரித்து சேகரிக்கும் பணி
உடுமலை,
உடுமலை நகராட்சியில், மக்காத குப்பையில் இருந்து பொருட்களை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி
உடுமலை நகராட்சி பகுதி 7.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சேகரமாகும் குப்பைகளை நகராட்சி துப்புரவுப்பணியாளர்கள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து சேகரித்து செல்கின்றனர்.
தினசரி 19 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதில் காய்கறி கழிவுகள், இலைகள் உள்ளிட்ட மக்கும் குப்பைகள் 12 டன்களாகும். மீதி 7 டன்கள்பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைகள், ரெக்சின், இரும்பு, டயர்கள் போன்ற மக்காத குப்பைகளாகும். மக்கும் குப்பைகள் நகராட்சி நுண் உரக்குடில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மக்காத குப்பைகள்
இதைத்தொடர்ந்து உடுமலை நகராட்சி பகுதியில் சேகரமாகும் மக்காதகுப்பைகள் நகராட்சி வாரச்சந்தை வளாகம் மற்றும் பொள்ளாச்சி சாலையில் உள்ள நகராட்சி உரக்கிடங்கு (குப்பைக் கிடங்கு) வளாகம்ஆகிய இடங்களில் உள்ள வள மீட்பு மையங்களுக்கு நகராட்சி துப்புரவுப்பணியாளர்களால் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு அந்த மக்காத குப்பையில் இருந்து பொருட்களை தங்களது சொந்த செலவில் தரம் பிரித்து எடுத்து அப்புறப்படுத்திகொள்வதற்கான உரிமத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு, நகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. இதற்கு தேவையான தொழிலாளர்களை அந்த தனியார் நிறுவனம் தனது சொந்த பொறுப்பில் பணியமர்த்தியுள்ளது.
தரம் பிரிக்கும் பணி
அந்த தொழிலாளர்கள் தங்குவதற்கான இடத்தை மட்டும் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. மக்காத குப்பையில் இருந்து பொருட்களை தரம்பிரித்து சேகரிக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படும் பொருட்களை அந்த தனியார் நிறுவனம் தனது பொறுப்பில் விற்பனை செய்து கொள்ளும். அத்துடன் விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவுப்பொருட்களை தனது சொந்த செலவில் அரியலூர் மற்றும் கோவையில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைக்கு கொண்டு போய் சேர்க்கும்.
இந்த ஒப்பந்தப்படி துப்புரவுப்பணியாளர்களால் வள மீட்பு மையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் மக்காத குப்பையில் இருந்து பொருட்களை தரம்பிரித்து எடுத்து அப்புறப்படுத்துவதற்கு நகராட்சிக்கு எந்த வித செலவும் இல்லை என்றும், அதேசமயம் மக்காத குப்பையை தரம்பிரித்து அப்புறப்படுத்துவதற்கு இதுவரை மாதம்தோறும் ரூ.40ஆயிரம் வரை செலவினமாக இருந்து வந்த தொகை இனி நகராட்சிக்கு மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story