தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.96 ஆயிரம் மோசடி
தனியார் நிறுவன ஊழியரிடம் நூதன முறையில் ரூ.96 ஆயிரம் மோசடி
கிருஷ்ணகிரி, டிச.2-
வீட்டின் பழைய சாமான்களை வாங்குவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம், செல்போனில் தொடர்பு கொண்டு நூதன முறையில் ரூ.96 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த துணிகர மோசடி குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் நிறுவன ஊழியர்
ஓசூர் பாகலூர் ரோடு மூவேந்தர் நகரைச் சேர்ந்தவர் சுகில்அகமது (வயது42), ஓசூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் உள்ள பிரிட்ஜ் மற்றும் பர்னிச்சர்களை ஒரு செல்போன் செயலி (ஆப்) வழியாக விற்பனை செய்யபோவதாக அறிவிப்பு செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகில்அகமது செல்போன் எண்ணை ஒருவர் தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர், பழைய வீட்டு சாமான்களை தான் வாங்கிக் கொள்வதாகவும், வாட்ஸ் அப்பில் ‘க்யூ ஆர்க்கோடு’ அனுப்புகிறேன். அதனை ஸ்கேன் செய்தால் உங்களது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தி விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
ரூ.96 ஆயிரம் மோசடி
அதற்கு சுகில் அகமது சம்மதம் தெரிவித்துள்ளார். உடனே அந்த நபர் வாட்ஸ் அப்பில் ‘க்யூ ஆர்க்கோடு’ ஒன்றை அனுப்பினார். சுகில் அகமதுவும் அந்த ‘க்யூ ஆர்க்கோட்டை’ ஸ்கேன் செய்துள்ளார். அப்போது சுகில் அகமது வங்கி கணக்கில் இருந்து 96 ஆயிரத்து 666 ரூபாய் எடுக்கப்பட்டதாக செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுகில் அகமது இதுதொடர்பாக கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் காந்திமதி வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் ரூ.96 ஆயிரம் மோசடி செய்த அந்த மர்மநபர் குறித்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story