கோத்தகிரி அருகே திருமணமான 5-வது மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை
கோத்தகிரி அருகே திருமணமான 5-வது மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை
கோத்தகிரி
கோத்தகிரி அருகே திருமணமான 5-வது மாதத்தில் தூக்குப்போட்டு புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
புதுப்பெண்
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி, தொட்டமனை ஹட்டி அருகே உள்ள இண்டி மொரஹட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 24). இவருக்கும் கப்பட்டி கிராமத்தை சேர்ந்த மோனிஷா (21) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆனந்த் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
ஆனந்தின் பெற்றோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இதனால் கோவையில் மோனிஷாவை கவனிக்க யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆனந்த், தனது மனைவியை கடந்த வாரம் கப்பட்டியில் உள்ள மாமியார் வீட்டில் கொண்டுவிட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்று காலை மோனிஷாவின் தாயார் விஜயா வழக்கம் போல தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். மதியம் வீட்டில் இருந்த மோனிஷா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்துவிட்டு பெண் கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
பின்னர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, மோனிஷா தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மோனிஷாா வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில், கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோனிஷா தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோனிஷாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் குன்னூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்தனர்.
திருமணமான 5-வது மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story