நீலகிரி-கேரளா இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்


நீலகிரி-கேரளா இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2021 8:28 PM IST (Updated: 1 Dec 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி-கேரளா இடையே பஸ் போக்குவரத்து தொடக்கம்

கூடலூர்

21 மாதங்களுக்கு பிறகு நீலகிரி-கேரளா இடையே பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் 2 மாநில மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொது போக்குவரத்துக்கு தடை

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழகம்-கேரளா இடையே அரசு பஸ் போக்குவரத்து இயக்கம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்தாலும், அரசு பஸ்கள் இயக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் மாநில எல்லைகள் வரை சென்று, பயணிகள் வாகனங்களில் ஏறி கேரளாவுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம்- கர்நாடகா இடையே பொது போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

21 மாதங்களுக்கு பிறகு தொடக்கம்

இதனால் இரு மாநிலங்களை சேர்ந்த எல்லையோர மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து வணிக ரீதியாகவும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் கொரோன பரவல் குறைந்து வருவதால் தமிழகம்- கேரளா இடையே பொதுப்போக்குவரத்து தொடங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு தளர்வில் தமிழகம்-கேரளா இடையே அரசு பஸ்கள் இயக்க அனுமதி அளித்தது. அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், ஊட்டியில் இருந்து நேற்று முதல் கேரளாவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் இருந்து கூடலூருக்கு கேரள பஸ் காலை 8.15 மணிக்கு பயணிகளுடன் வந்தது. 

இரு மாநில மக்கள் வரவேற்பு

அப்போது கூடலூர்-கேரளா எல்லையான நாடுகாணியில் பொதுமக்கள்  கேரள பஸ்சை வரவேற்றனர். தொடர்ந்து மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தனர். தொடர்ந்து வழிநெடுகிலும் கேரள பஸ்சுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கூடலூர் பஸ் நிலையத்துக்கு வந்த கேரள பஸ் டிரைவர் நடத்துனருக்கு பொதுமக்கள் தரப்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.

இதேபோல் கூடலூர் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளுடன் மலப்புரம் மாவட்டம் நிலம்பூருக்கு புறப்பட்டு சென்ற தமிழக அரசு பஸ்சை கேரள எல்லையான வழிகடவில் கேரள மக்கள் ரிப்பன் வெட்டி வரவேற்றனர். தொடர்ந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

10 பஸ்கள் இயக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கூடலூரில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, கண்ணனூர், கோழிக்கோடு, கள்ளிக்கோட்டை, நிலம்பூர், சுல்தான்பத்தேரி ஆகிய இடங்களுக்கு 10 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.  பஸ் போக்கு வரத்து தொடங்கியதால் இருமாநில வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் கூறுகையில், தமிழகம்-கேரளா இடையே பொது போக்குவரத்து இல்லாததால் கூடலூர் மட்டுமின்றி அனைத்து பகுதியிலும் பரவலாக வணிகரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் வியாபாரம் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story