நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது


நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது
x
தினத்தந்தி 1 Dec 2021 9:00 PM IST (Updated: 1 Dec 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது

திருப்பூர், 
நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்தது. ஆனால் இந்த விலை குறைப்பு போதாது என்றும், ரூ.50 வரை குறைக்க வேண்டும் என்றும் தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
நூல் விலை ரூ.10 குறைந்தது
பின்னலாடை தொழிலுக்கு மூலப்பொருளாக உள்ள நூல் விலை கடந்த 11 மாதங்களில் கிலோவுக்கு ரூ.130 வரை உயர்ந்தது. அதிகபட்சமாக கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது. இதுவரை இல்லாத அளவுக்கு நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறி பின்னலாடை தொழில் துறையினர் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருப்பூரில் உண்ணாவிரதம், முழு அடைப்பு, வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர். நூல் விலை உயர்வு காரணமாக புதிய ஆர்டர்களை எடுப்பதற்கும் தயக்கம் காட்டி வந்தனர்.
நூல் விலை மாதந்தோறும் 1-ந் தேதி அறிவிக்கப்படும். அதன்படி நேற்று அறிவிக்கப்பட்டதில் நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. அனைத்து வகை நூலும் கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். கிலோவுக்கு ரூ.10 குறைவு என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றும், இதனால் பெரிய மாற்றம் ஏற்படப்போவதில்லை என்றும் பனியன் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்துடைப்பு
இதுகுறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நூல் விலை கடந்த மாதம் ஒரேநாளில் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. இது வரலாறு காணாத உயர்வு ஆகும். கிலோவுக்கு ரூ.5, ரூ.10 அதிகரித்தால் அவற்றை தாக்குப்படித்து புதிய ஆர்டர்களை எடுப்போம். ஆனால் ரூ.50 உயர்ந்த காரணத்தால் கடந்த மாதம் புதிய ஒப்பந்தம் அமைக்க முடியவில்லை. நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் உற்பத்தியாளர்கள் நூல் கொள்முதல் கூட செய்யவில்லை.
அடையாள வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் இருந்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். தமிழக அரசு சார்பில் நூல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இன்று (நேற்று) நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைத்துள்ளனர். இது கண்துடைப்பை போல் உள்ளது. ஒரேநாளில் ரூ.50 அதிகரித்து விட்டு பின்னர் ரூ.10 குறைப்பது என்பது எந்த வகையில் நியாயம். நவம்பர் மாதம் ஏற்றிய விலையை முழுவதுமாக குறைத்தால் மட்டுமே புதிய ஒப்பந்தங்களை செய்ய வசதியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story