சாத்தான்குளத்தில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பாதிப்பு
சாத்தான்குளத்தில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பாதிப்பு
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
சாத்தான்குளத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நேற்று முன்தினம் ஆதிதிராவிடர் காலனியை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள தெருக்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் 80-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஓடை தெருவில் உள்ள காலனியில் குடியிருப்பு வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் வீடுகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா, வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் உள்பட வருவாய்த் துறையினரும், சுகாதாரத்துறையினர் ஆதிதிராவிடர் காலனி சென்று பார்வையிட்டனர்.
தனியார் மண்டபத்தில் தங்க வைப்பு
தண்ணீர் தேங்கியுள்ள வீடுகளில் இருந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, சாத்தான்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
தாசில்தார் தலைமையில் வருவாய் துறையினர் மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story