பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையில் முறைகேடு:கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்


திருமலைசங்கு
x
திருமலைசங்கு
தினத்தந்தி 1 Dec 2021 10:06 PM IST (Updated: 1 Dec 2021 10:06 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மயிலாடுதுறை:-

மயிலாடுதுறை அருகே பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகையில்  முறைகேட்டில் ஈடுபட்டதாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

பயிர்க்காப்பீடு

மயிலாடுதுறை அருகே உள்ள அகரகீரங்குடி ஊராட்சி முட்டம் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு 450 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். அந்த பயிர்களுக்கு சிட்டா, அடங்கலை அகரகீரங்குடி கிராம நிர்வாக அலுவலராக இருந்த திருமலைசங்கு (வயது 54) என்பவரிடம் சமர்ப்பித்து விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்திருந்தனர். அந்த பருவத்தில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா பயிர்களுக்கான இழப்பீடு ஏக்கருக்கு 68 சதவீதம் தொகையாக ரூ.22 ஆயிரம் வழங்கப்படும் என காப்பீட்டு நிறுவனம் அறிவித்தது. 
இந்த இழப்பீட்டு தொகையானது பல விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. இதையடுத்து, இழப்பீட்டு தொகை கிடைக்காத விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை அணுகி உள்ளனர். அவர்களிடம் உழவன் செயலியை பயன்படுத்தி பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். 

வேறு நபர்களுக்கு...

அதன்படி செயலியை பயன்படுத்தி விவசாயிகள் இழப்பீட்டு தொகை வந்துள்ளதா? என பார்த்தபோது, அதே புல எண்ணில் வேறு நபர்களுக்கு தொகை செலுத்தப்பட்டிருந்தது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர்கள் யார்? எனப்பார்த்தபோது  அவர்கள் அனைவருமே கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு மற்றும் அவரது உறவினர்கள் என்பது தெரியவந்தது. 
மேலும் அதிர்ச்சியாக சிலருடைய புல எண்ணுக்கான இழப்பீட்டு தொகை கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவின் பெயருக்கே வரவு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். அந்த புகாரில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலியான சிட்டா, அடங்கல் வழங்கி மறையூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றும், அதன்பேரில் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டு தொகை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் மீது விசாரணை செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். 

பணியிடை நீக்கம்

இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் உத்தரவின் பேரில் உதவி கலெக்டர் பாலாஜி ஆவணங்களை சரிபார்த்ததில் கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்கு போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் திருமலைசங்குவை பணியிடை நீக்கம் செய்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story