பெண் ஐ பி எஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை பாலியல் தொல்லை வழக்கை தாமதப்படுத்த நினைத்தால் பிடிவாரண்டு டி ஜி பி தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை


பெண் ஐ பி எஸ்  அதிகாரியிடம் குறுக்கு விசாரணை பாலியல் தொல்லை வழக்கை தாமதப்படுத்த நினைத்தால் பிடிவாரண்டு  டி ஜி பி  தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2021 10:39 PM IST (Updated: 1 Dec 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் தொல்லை வழக்கில் பெண் ஐ பி எஸ் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடந்தது அப்போது வழக்கை தாமதப்படுத்த நினைத்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என சிறப்பு டி ஜி பி தரப்புக்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்

விழுப்புரம்

பாலியல் புகார்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
இந்த நிலையில் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜரானார். முன்னாள் டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் ஆஜராகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

காலஅவகாசம் கேட்டு

இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரி விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் எதிர்தரப்பு குறுக்கு விசாரணையை தொடங்க நீதிபதி கோபிநாதன் அனுமதியளித்தார். 
அப்போது முன்னாள் டி.ஜி.பி. தரப்பு வக்கீல் ரவீந்திரன் குறுக்கிட்டு, எங்கள் தரப்பு மூத்த வக்கீல் மற்றொரு பணி காரணமாக ஐகோர்ட்டில் இருப்பதால் அவர் நேரில் வர முடியவில்லை, எனவே பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் நாங்கள் குறுக்கு விசாரணை செய்வதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டு மனுதாக்கல் செய்தார்.

நீதிபதி எச்சரிக்கை

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி கோபிநாதன், ஆரம்பத்தில் இருந்தே இவ்வழக்கு விசாரணைக்கு முன்னாள் டி.ஜி.பி. தரப்பு ஒத்துழைப்பு அளிப்பதில்லை, ஒவ்வொரு விசாரணையின்போதும் ஏதாவது காரணம் சொல்லி மனுதாக்கல் செய்வது, கால அவகாசம் கேட்பது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்தார். 
மேலும் வேண்டுமென்றே இவ்வழக்கு விசாரணையை தாமதப்படுத்த நினைக்கிறீர்கள், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று முன்னாள் டி.ஜி.பி. தரப்புக்கு நீதிபதி கோபிநாதன் எச்சரிக்கை விடுத்தார். 

பெண் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை

அதன் பிறகு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பினர் குறுக்கு விசாரணை செய்யலாம் என்று நீதிபதி கூறினார். இதையடுத்து அந்த தரப்பை சேர்ந்த வக்கீல்கள் வெங்கடேசன், தெய்வநாயகம் ஆகியோர் காலை 10.45 மணிக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் குறுக்கு விசாரணையை தொடங்கினர். அவரிடம் நடந்த சம்பவம் பற்றி விளக்கமாக கேட்டறிந்து குறுக்கு விசாரணை செய்தனர்.
இந்த விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் மதியம் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிக்கு முடிவடைந்தது. இந்த விசாரணையின் முழு விவரத்தையும் நீதிபதி கோபிநாதன் பதிவு செய்துகொண்டார்.

Next Story