ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை காங்கிரஸ் மீது மம்தா தாக்கு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 1 Dec 2021 11:27 PM IST (Updated: 1 Dec 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை என காங்கிரசை மம்தா பானர்ஜி தாக்கினார்.

மும்பை, 
தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை என காங்கிரசை மம்தா பானர்ஜி தாக்கினார். 
காங்கிரசுடன் மோதல் போக்கு
நாட்டில் பா.ஜனதாவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அவ்வப்போது கூறி வருகின்றன. இதில், ஒரு தரப்பினர் காங்கிரஸ் தலைமையிலும், மற்றொரு தரப்பினர் காங்கிரசை தவிர்த்து மாற்று அணி அமைப்பது தொடர்பான மனநிலையிலும் உள்ளனர். 
காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் பட்சத்தில் அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் சமீபகாலமாக காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. சமீபத்தில் மேகாலயா மாநிலத்தில் உள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். 
இதேபோல கோவா உள்ளிட்ட சில மாநில காங்கிரஸ் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர். இது இரு கட்சிகளுக்கு இடையே பனிப்போரை ஏற்படுத்தி உள்ளது. 
மும்பை சுற்றுப்பயணம்
இந்தநிலையில் காங்கிரசை ஓரம்கட்டி விட்டு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் திரணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் டெல்லி சென்ற அவர், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்கவில்லை.
இந்தநிலையில் 3 நாள் பயணமாக மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் மும்பை வந்தார். அவர் சிவசேனா தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் உத்தவ் தாக்கரேக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால், அவரை சந்திக்க முடியவில்லை. 
மாறாக உத்தவ் தாக்கரேயின் மகனும், மந்திரியுமான ஆதித்ய தாக்கரேயை சந்தித்தார். அப்போது சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் உடனிருந்தார்.
காங்கிரஸ் மீது விமர்சனம்
இந்தநிலையில் நேற்று மும்பையில் நடந்த சிவில் சொசைட்டி அமைப்பினரின் நிகழ்ச்சியில் பங்கேற்ற மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியை விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பாஜனதாவை துரத்தி நாட்டை பாதுகாக்க நாங்கள் விரும்புகிறோம். இதற்காக அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றிணைந்தால் சுலபமாக பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். 
எதிர்க்கட்சிகளுக்கு வழிகாட்ட சமூக அமைப்புகளை உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழுவை அமைக்குமாறு காங்கிரசை கேட்டுக்கொண்டு இருந்தேன். ஆனால் அதை காங்கிரஸ் செய்யவில்லை. சமூக பிரதிநிதிகளான நீங்கள் பா.ஜனதாவுக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் எங்களது கட்சி போட்டியிடாது. 
இவ்வாறு அவர் பேசினார். 
இந்த நிகழ்ச்சியில் சமூக சேவகி மேதா பட்கர், சினிமா பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி இல்லை
இதையடுத்து மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரசுடன் கூட்டணி ஆட்சியை பகிர்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை, மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். 
பின்னர் மம்தா பானர்ஜியிடம் நிருபர்கள், சரத்பவாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக்க நீங்கள் விரும்புகிறீர்களா? என்று கேட்டனர். அதற்கு சட்டென்று பதிலளித்த மம்தா, “தற்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று எதுவும் இல்லை” என்றார். 
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்து வருவதும், அந்த கூட்டணியில் சரத்பவார் கட்சி அங்கம் வகிப்பதும் நினைவுக்கூரத்தக்கது. 

Next Story