திருவாரூர் அருகே விவசாயிகள் சாலை மறியல்


திருவாரூர் அருகே விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 Dec 2021 11:55 PM IST (Updated: 1 Dec 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

குறுவை நெல் சாகுபடியில் நிவாரணம் வழங்குவதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி திருவாரூர் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்:
குறுவை நெல் சாகுபடியில் நிவாரணம் வழங்குவதில் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி திருவாரூர் அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கணக்கெடுப்பு பணி
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நேரத்தில் பருவமழை பெய்தது. இந்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முழுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் குழு கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தனர். இதனையடுத்து மழையினால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிருக்கு ஒரு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு பணி நடத்தி வருகின்றனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் திருவாரூர் அருகே ஒரு கிராமத்தில் இந்த ஆண்டு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். இதில் கனமழையால் பாதிக்கப்படாத விவசாயிகளுக்கு குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கூறி போலியான சான்று வழங்கி முறைகேட்டில் அதிகாரிகள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி நேற்று பின்னவாசல் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாசில்தார் அன்பழகன், வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா மற்றும் திருவாரூர் தாலுகா போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அப்போது போலியாக கொடுக்கப்பட்ட சான்றிதழ்கள் உடனடியாக ரத்து செய்யப்படும் என்றும், அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவாதம் அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவி்ட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story