அமைச்சர் தூண்டுதல்பேரில் தி.மு.க.வில் சேர வற்புறுத்தக்கூடாது என-போலீசாருக்கு உத்தரவிடக்கோரிய மனு ஐகோர்ட்டில் முடித்து வைப்பு
அமைச்சர் தூண்டுதல்பேரில் தி.மு.க.வில் சேர வற்புறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவிடக்கோரிய மனு ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டது.
மதுரை,
-
கரூர் மாவட்டத்தை சேர்ந்த மதுசுதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூர் மாவட்ட அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளராக உள்ளேன். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக தி.மு.க.வில் சேர கட்டாயப்படுத்தி வருகிறார். இதற்கு போலீசாரும் உடந்தையாக உள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரரின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வில் இணையுமாறு போலீசார் என்னை வற்புறுத்தினர். இல்லையென்றால் என் மீது போதைப்பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வோம் என மிரட்டினர். என் மீது தொடர்ச்சியாக பொய்வழக்கு பதிவு செய்யலாம் என அஞ்சுகிறேன். எனவே இது சம்பந்தமாக போலீசார் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை கூறாமல் ஒட்டுமொத்தமாக போலீசாருக்கு உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் கோரிக்கையின்பேரில் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று கூறி, மனுவை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story