இதுவரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல்-அமைச்சர் சக்கரபாணி தகவல்


இதுவரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல்-அமைச்சர் சக்கரபாணி தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2021 7:51 PM GMT (Updated: 1 Dec 2021 7:51 PM GMT)

இதுவரை 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

மதுரை, 

இதுவரை 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

பணம் பட்டுவாடா

தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 தமிழகம் முழுவதும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. மழையால் திறந்தவெளி சேமிப்பு கிட்டங்கிகளில் நெல் மூடைகள் வீணாகாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் கொள்முதல் மையங்களில் பெறப்படும் நெல் மூடைகளை பாதுகாத்து வைக்காமல், உடனடியாக அரவை மையங்களுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

3 லட்சம் டன்

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 3 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் 500 மெட்ரிக் டன் அரைக்கும் வகையில் பொதுமக்கள், தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் மூலம் எந்திரங்கள் நிறுவப்பட்டு நெல் அரைக்கப்படும். இதுபோல் நாளொன்றுக்கு ஆயிரம் மெட்ரிக் டன் நெல் அரைப்பதற்கான திட்டமும் விரைவில் கொண்டுவர தமிழக முதல்- அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கிட்டங்கிகள்

மதுரையில் 25 கொள்முதல் மையங்களில் 24 கொள்முதல் மையங்கள் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் செயல்பட்டு வருகிறது. இங்கு பெறப்படும் நெல் மூடைகள் பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை வைகை மற்றும் முல்லை பெரியாறு பாசனத்தின் மூலம் அதிகமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனால் விளைவிக்கக்கூடிய நெல் மூடைகளை பாதுகாக்க கூடுதலாக கிட்டங்கிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story