20 மாதங்களுக்கு பிறகு செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் மீண்டும் இயக்கம்
செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டது.
செங்கோட்டை, டிச.2-
கொரோனா தொற்று
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு தமிழக அரசு பஸ்கள் சென்று வந்தன. அதேபோல் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் இயங்கி வந்தன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசு பஸ்களும், அதேபோன்று கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் இரு மாநில பயணிகளும் மிகவும் அவதி அடைந்து வந்தனர்.
மீண்டும் இயக்கம்
தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்ததை தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி நேற்று முதல் இரு மாநிலங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது.
கேரள மாநிலம் கொல்லம், புனலூர், திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொட்டாரக்கரை, ஆலப்புழா ஆகிய ஊர்களுக்கு செங்கோட்டையில் இருந்து கேரள அரசு பஸ்கள் புறப்பட்டுச் சென்றது. அதேபோல் தமிழக அரசு பஸ்களும் கேரள மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்றன.
பயணிகள் மகிழ்ச்சி
மேலும் செங்கோட்டையில் இருந்து எர்ணாகுளம், சங்கணாச்சேரி, குருவாயூர், அச்சன்கோவில் மற்றும் பல ஊர்களுக்கு படிப்படியாக பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
நேற்று முதல் நாள் என்பதால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது. 20 மாதங்களுக்கு பிறகு இரு மாநிலங்களுக்கு இடையேயும் அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மற்றும் வியாபாரிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story