பா.ஜனதா எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொல்ல சதி


பா.ஜனதா எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொல்ல சதி
x
தினத்தந்தி 2 Dec 2021 1:36 AM IST (Updated: 2 Dec 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொல்ல சதி செய்யப்பட்ட வீடியோ, ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான எஸ்.ஆர்.விஸ்வநாத்தை கொல்ல சதி செய்யப்பட்ட வீடியோ, ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் உள்பட 2 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ, வீடியோ வெளியானது

பெங்களூரு எலகங்கா தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் எஸ்.ஆர்.விஸ்வநாத். இவர், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் (பி.டி.ஏ) தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வை கொலை செய்ய கூலிப்படை மூலம் சதித்திட்டம் தீட்டிய வீடியோ, ஆடியோக்கள் நேற்று சமூக வலைதளங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி சேனல்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்கும்படியும், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவுக்கு, எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. கடிதம் எழுதி கோரிக்கை விடுத்துள்ளார்.

ரூ.5 கோடி பேரம்

எலகங்கா சட்டசபை தொகுதியில் தன்னை எதிர்த்து 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபால கிருஷ்ணா தான் குல்லா தேவராஜிடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி இருப்பதாகவும், இதற்காக ரூ.5 கோடி வரை ஆந்திராவை சேர்ந்த கூலிப்படையினருக்கு கொடுக்க கோபால கிருஷ்ணா தயாராக இருந்ததாகவும் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டுகளைகூறி இருக்கிறார்.

இதற்கிடையில், தன்னை கொலை செய்ய கோபால கிருஷ்ணா சதித்திட்டம் தீட்டி குல்லா தேவராஜுடன் பேசும் ஆடியோ மற்றும் பணம் கொடுக்கும் வீடியோ ஆதாரங்களையும் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. வெளியிட்டு இருக்கிறார். அந்த ஆடியோவில் கோபால கிருஷ்ணாவும், குல்லா தேவராஜும் பேசி இருப்பதாவது:-

கூலிப்படையின் மூலம்...

எஸ்.ஆர்.விஸ்வநாத் தோட்டத்திற்கு தனியாக தான் செல்வார், அந்த சந்தர்ப்பத்தில் அவரை தீர்த்து கட்டினால் சரியாக இருக்கும். இதற்காக கூலிப்படைக்கு எத்தனை கோடி ரூபாய் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். எஸ்.ஆர்.விஸ்வநாத்தை தீர்த்து கட்டி விட்டால், எலகங்கா சட்டசபை தொகுதிக்கு நடைபெறும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று விடுவேன். ஆந்திராவை சேர்ந்த கூலிப்படையினர் மூலம் இந்த விவகாரத்தை சுமுகமாக முடிக்க வேண்டும் என்று குல்லா தேவராஜுடம் கோபால கிருஷ்ணா பேசுவது போல அந்த ஆடியோவில் இடம் பெற்றிருக்கிறது.

இந்த கொலையை மட்டும் செய்தால், நீ (குல்லா தேவராஜ்) பெரிய ஆளாகி விடுவாய் என்றும் அவர் கூறுவது போல இருக்கிறது. அதற்கு 15 நாட்கள் இல்லை, 6 மாதங்கள் ஆனாலும் சரி நிதானமாகவும், கச்சிதமாகவும் இந்த வேலையை செய்து முடித்து விடுகிறேன் என்று குல்லா தேவராஜ் சொல்வதும் ஆடியோவில் இடம் பெற்றிருக்கிறது. மேலும் எஸ்.ஆர்.விஸ்வநாத்தை தீர்த்து கட்டுவதற்காக முதற்கட்டமாக குல்லா தேவராஜிடம் ரூ.20 லட்சத்தை கோபால கிருஷ்ணா கொடுப்பது போன்ற வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

போலீசில் புகார்

இந்த நிலையில், தன்னை கூலிப்படையை ஏவி காங்கிரஸ் பிரமுகரான கோபால கிருஷ்ணா கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது குறித்து பெங்களூரு புறநகர் மாவட்டம் ராஜனகுன்டே போலீஸ் நிலையத்தில் எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. புகார் அளித்துள்ளார். அந்த புகாருடன் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் அவர் கொடுத்திருக்கிறார். ஆனால் எஸ்.ஆர்.விஸ்வநாத் கொடுத்த புகாரின் பேரில் ராஜனகுன்டே போலீசார், என்.சி.ஆர். மட்டுமே பதிவு செய்திருக்கிறார்கள்.

காங்கிரஸ் பிரமுகர் கோபால கிருஷ்ணா, குல்லா தேவராஜ் மீது ராஜனகுன்டே போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ. எழுத்து பூர்வமாக ராஜனகுன்டே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், கோர்ட்டில் அனுமதி பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

Next Story