கர்நாடகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்; மந்திரி ஆர்.அசோக் பேட்டி


கர்நாடகத்தில் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 1:54 AM IST (Updated: 2 Dec 2021 1:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

கர்நாடகத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரஸ் பரவவில்லை. தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு டெல்டா அல்லாத மாறுபட்ட பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த நபரின் சளி மாதிரி மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதியானால், வேறு வழியின்றி கர்நாடகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.இந்திய மருத்துவ கவுன்சிலிடம் இருந்து அறிக்கை வரவேண்டியுள்ளது. 

ஆயினும் மாநில அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொரோனா முதல், 2-வது அலை மூலம் நாங்கள் பாடம் கற்று கொண்டுள்ளோம். மக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். நான் இயற்கை பேரிடர் குழு தலைவராகவும் உள்ளதால், முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் எனக்கும் இருக்கிறது.

கூட்டத்தொடர் ரத்து

மாநில எல்லைகள் மற்றும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. புதிய வைரஸ் இன்னும் நமது நாட்டில் பரவவில்லை என்பதே நமக்கு திருப்தி அளிக்கக்கூடிய விஷயமாகும். புதிய வைரசை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதலை கர்நாடக அரசு முழுமையாக பின்பற்றும். சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், அதிகாரிகள் மற்றும் நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

வருகிற 13-ந் தேதி சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இந்த கூட்டம் திட்டமிட்டப்படி தொடங்கும். இந்த கூட்டத்தொடரை நடத்தியே தீருவோம்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Next Story