பெத்தநாயக்கன்பாளையம் அருகே கோம்பை ஏரி உடையும் அபாயம் வசிஷ்டநதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பெத்தநாயக்கன்பாளையம் அருகே கோம்பை ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து வசிஷ்ட நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பெத்தநாயக்கன்பாளையம்,
கோம்பை ஏரி
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட நெய்யமலை அடிவாரத்தில் இடையப்பட்டி புதூர் பகுதியில் கோம்பை ஏரி அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நிரம்பி வருகிறது.
இந்த நிலையில் திடீரென ஏரியின் கரையோர பகுதிகளில் விரிசல் ஏற்பட்டதால் தாண்டானூர், வெள்ளாளப்பட்டி ஆகிய கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் மாணிக்கம், ஒன்றிய பொறியாளர் சரவண பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் கார்த்தி, பெத்தநாயக்கன்பாளையம் கூட்டுறவு வங்கி தலைவர் மோகன் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏரிக்கரைக்கு இரவில் விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் ஏரி தண்ணீர் கரை உடைப்பின் வழியாக அதிகளவில் வெளியே வராமல் இருப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மணல் மூட்டைகளை அடுக்கி கரை உடைப்பை அடைக்க முயன்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
அதே நேரத்தில் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள வசிஷ்ட நதி ஆற்றில் சென்றடைவதற்கு வசதியாக மின்னொளி வெளிச்சத்தில் வாய்க்கால் வெட்டி தண்ணீரை ஆற்றுக்கு திருப்பி விடும்பணியிலும் ஈடுபட்டனர்
இதையொட்டி, தாண்டானூர், வெள்ளாளப்பட்டி மற்றும் வசிஷ்ட நதி கரைேயார பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story