5½ கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 7 பேர் கைது


5½ கிலோ தங்கத்தை கொள்ளையடித்த 7 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2021 2:17 AM IST (Updated: 2 Dec 2021 2:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வியாபாரியிடம் 5½ கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலாளி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2¼ கோடி தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் வியாபாரியிடம் 5½ கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த காவலாளி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.2¼ கோடி தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

5½ கிலோ தங்க கட்டிகள்

பெங்களூரு அல்சூர்கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அவென்யூ ரோட்டில் நகைக்கடை வைத்து நடத்தி வருபவர் சித்தேஷ்வர். இவர், தங்க நகைகளை மொத்தமாக வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி இரவு விதானசவுதா அருகே உள்ள நகைக்கடையில் இருந்து 5½ கிலோ தங்க கட்டிகளை வாங்கி கொண்டு, அவென்யூ ரோட்டில் உள்ள தனது நகைக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சித்தேஷ்வர் புறப்பட்டு சென்றார்.

அந்த மோட்டார் சைக்கிளை, சித்தேஷ்வரிடம் வேலை செய்யும் சூரஜ் என்பவர் ஓட்டிச் சென்றிருந்தார். மைசூரு வங்கி சர்க்கிள் அருகே வைத்து மோட்டார் சைக்கிள்களில் வந்த மா்மநபர்கள், சித்தேஷ்வர், சூரஜிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததுடன், அவர்களை தாக்கிவிட்டு ரூ.5½ கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்று விட்டார்கள். இதுகுறித்து அல்சூர்கேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

7 பேர் கைது

மேலும் கொள்ளையர்களை பிடிக்க மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் மேற்பார்வையில், அல்சூர்கேட் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படை போலீசாா், சந்தேகத்தின் பேரில் முதலில் சித்தேஷ்வரிடம் வேலை செய்யும் சூரஜிடம் விசாரணை நடத்தினார்கள். அவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது.

அதே நேரத்தில் சித்தேஷ்வர் வழக்கமாக, விதானசவுதா அருகே உள்ள கடையில் இருந்து தான் தங்க கட்டிகளை வாங்கி செல்வது பற்றி நன்கு அறிந்த கும்பலே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சித்தேஷ்வரிடம் தங்க கட்டிகளை கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்த 7 பேரை அல்சூர்கேட் போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- 

நகைக்கடை காவலாளி

பெங்களூருவில் தங்க நகைகள் வியாபாரம் செய்யும் வியாபாரியான சித்தேஷ்வர், கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி தங்க கட்டிகளை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் தன்னிடம் வேலை செய்யும் ஊழியருடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சித்தேஷ்வர் மற்றும் அவரது ஊழியரை தாக்கி 5½ கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த கொள்ளை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள், நாகவாரா மெயின் ரோட்டை சேர்ந்த முகமது உசேன் (வயது 35), முகமுது பர்கான் (23), அஞ்சும் (39), வெங்கடேஷ்புரா கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (34), குஷால்நகரை சேர்ந்த் சாகித் அகமது (24), ஆர்.டி.நகரை சேர்ந்த உமேஷ் (54), கோவிந்தபுராவை சேர்ந்த சுகேல் பெய்க் (28) என்று தெரிந்தது. இவர்களில் ஒருவர், விதானசவுதா அருகே உள்ள நகைக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

ரூ.2¼ கோடி மதிப்பு

அவர் நகைக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவனித்து வந்துள்ளார். அதுபோல், சித்தேஷ்வரும் மொத்தமாக தங்க கட்டிகள் வாங்கி செல்வது பற்றி காவலாளிக்கு தெரியவந்துள்ளது. சித்தேஷ்வர் தங்க கட்டிகள் வாங்கி செல்லும் போது, அவற்றை கொள்ளையடிக்க 7 பேரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நவம்பர் 19-ந் தேதி சித்தேஷ்வர் தங்க கட்டிகளை வாங்கி செல்வது பற்றி தனது கூட்டாளிகளுக்கு, காவலாளி தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு, சித்தேஷ்வரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்ற கொள்ளையர்கள், மைசூரு வங்கி சர்க்கிளில் வைத்து 5½ கிலோ தங்க கட்டிகளை கொள்ளையடித்து சென்றிருந்தார்கள். கைதானவர்களில் 2 பேர் மீது துமகூரு மற்றும் பெங்களூரு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே கொலை, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கைதானவர்களிடம் இருந்து 4 கிலோ 984 கிராம் தங்க கட்டிகள், ஒரு அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.2¼ கோடி ஆகும்.

கமல்பந்த் பார்வையிட்டார்

கைதான 7 பேர் மீதும் அல்சூர்கேட் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இந்த கொள்ளையில் 7 பேரும் ஈடுபட்டு இருந்தார்கள். இந்த கொள்ளையில் தொடர்புடைய கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த அல்சூர்கேட் போலீசாருக்கு ரூ.70 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் கூறினார்.

முன்னதாக கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க கட்டிகள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் பார்வையிட்டாா்கள்.

Next Story