விசைப்படகில் இருந்து தவறி விழுந்த கேரள மீனவர் மாயம்
தேங்காப்பட்டணம் பொழிமுகம் பகுதியில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார். அவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கொல்லங்கோடு:
தேங்காப்பட்டணம் பொழிமுகம் பகுதியில் விசைப்படகில் இருந்து தவறி விழுந்து மீனவர் மாயமானார். அவரை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தேங்காப்பட்டணம் துறைமுகம்
வள்ளவிளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சூசை ஆன்டணி. இவர், தனக்கு சொந்தமான விசைப்படகை தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இரையுமன்துறையில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் பொழிமுக பகுதியில் நிறுத்தியிருந்தார்.
இந்த படகில் நேற்று இரவு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்வதற்காக வலை உள்ளிட்ட பொருட்களை ஏற்றும் வேலை பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.
கேரள மீனவர் மாயம்
பின்னர், பணியை முடித்து விட்டு வடமாநில மீனவர்கள் மற்றும் கேரளாவை சேர்ந்த மீனவர்கள் சேர்ந்து படகில் இருந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, படகின் ஒரு ஓரத்தில் இருந்த கேரள மாநிலம் கொச்சுதுறையை சேர்ந்த பனியடிமை (வயது 40) என்பவர் திடீரென நிலைதடுமாறி ஆற்றில் தவறி விழுந்தார்.
இதைகண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே ஆற்றில் குதித்து தவறி விழுந்த மீனவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
தேடும் பணி
இதையடுத்து கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொல்லங்கோடு தீயணைப்பு துறையினர் ஆற்றில் தவறி விழுந்த மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், இரவு நேரமானதால் தேடும் பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து தேடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
மீன்பிடிக்க செல்வதற்காக தயாரானபோது விசைப்படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் மாயமான சம்பவம் சக மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story