தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 2 Dec 2021 2:49 AM IST (Updated: 2 Dec 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

சீரமைக்கப்பட்ட சாலை
சாமியார் மடத்தில் இருந்து வேர்கிளம்பி செல்லும் சாலையில் பருத்தி வாய்க்கால் பாலம் உள்ளது. அந்த பகுதியில் சாலை சேதமடைந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்தனர்.  நடவடிக்கை எடுத்த துறையினரையும், செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’-க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

புழுதியால் மக்கள் அவதி
நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில் பல பகுதிகள் சேதம் அடைந்து உள்ளன. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மழை ஓய்ந்து, தற்போது வெயிலாக உள்ளது. இந்த நிலையில் சாலையில் உள்ள  புழுதி அதிக அளவில் பறக்கிறது. இதனால் எதிரில் வரும் வாகனம் கூட தெரியாத அளவுக்கு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் சாலை ஓரத்தில் உள்ள வீடுகளில் உடல்நலம் குன்றியவர்களும் புழுதியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து, புழுதி பறப்பதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                        -ஜெஸ்பின், சிராயன்குழி.
புதரை அகற்ற வேண்டும்
ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரையாக்குளம் வடக்குப்பகுதியில் குடிநீர் கிணறு உள்ளது. அந்த கிணற்றை சுற்றி புல்-பூண்டுகளும் முள் புதர்களுமாக காட்சி அளிக்கிறது. அது குடி நீரில் கலக்க வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர் மாசுபடும் சூழ்நிலை உள்ளது. எனவே குடிநீர் மாசுபடாமல் தடுக்க புல்-பூண்டு மற்றும் புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                                        -கே.ரவி, ரீத்தாபுரம்.

குண்டும், குழியுமான சாலை
தடிக்காரன்கோணம் பகுதியில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலை மிக மோசமாக சேதமடைந்து உள்ளது. எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் ஆபத்தும் உள்ளது. எனவே சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கை ஆகும். 
                                                                              -வே.மணிகண்டன், தடிக்காரன்கோணம்.
வீணாகும் குடிநீர்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணான்விளையில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இந்த குழாய் அத்திக்கடை கால்வாயை கடந்து சாலை வழியாக மறுபுறம் செல்வதால், சாலையில் செல்லும் வாகனங்களின் அழுத்தத்தால் குடிநீர் குழாய் அடிக்கடி உடைந்து தண்ணீர் வீணாகிறது. பல பகுதிகளில் தண்ணீர் சரிவரகிடைக்கவில்லை என்று புகார் எழும் நிலையில், இதுபோல் தண்ணீர் வீணாகாமல் தடுக்க உடனே குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                                       -ரவி, குஞ்சன்விளை.

சமையல் அறையில் கூரை சேதம்
பூதப்பாண்டி அருகே உள்ள திட்டுவிளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள சமையல் அறையில் உள்ள கூரை சேதம் அடைந்து உள்ளது. சமீபத்தில் மழை பெய்த போது, சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அருகில் உள்ளவர்களிடம் மண்எண்ணெய் அடுப்பு வாங்கி சமையல் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கூரையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                                                   -மாசிலாமணி, பூதப்பாண்டி.


Next Story