பள்ளிக்கு நிலம் கேட்டு வீதியில் அமர்ந்து உணவு உண்ட தலைமை ஆசிரியர்


பள்ளிக்கு நிலம் கேட்டு வீதியில் அமர்ந்து உணவு உண்ட தலைமை ஆசிரியர்
x
தினத்தந்தி 2 Dec 2021 5:47 PM IST (Updated: 2 Dec 2021 5:47 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களின் நலன் கருதி விரைவாக பள்ளி கட்டிடத்தை இடித்து வேறு இடத்தில் கட்ட உள்ளூர் மக்களிடம் நிலம் கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

காஞ்சீபுரம் மாநகராட்சி 27-வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கடந்த 2007-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் புதிய உயர்நிலைப்பள்ளிக்கு முறையாக நிலம் தேர்வு செய்யாமல், அவசரகதியில் அதே பகுதியில் உள்ள சின்ன வேப்பங்குளத்தின் கரையில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டதாக தெரிகிறது.இதில், தற்போது 125 மாணவர்கள் மற்றும் 97 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், பள்ளி கட்டிடங்கள் குளத்தின் கரையில் கட்டப்பட்டுள்ளதால் அஸ்திவாரத்தில் மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது.பள்ளி மாணவர்களின் நலன் கருதி விரைவாக பள்ளி கட்டிடத்தை இடித்து வேறு இடத்தில் கட்ட உள்ளூர் மக்களிடம் நிலம் கேட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலா போராட்டத்தில் ஈடுபட்டார்.அந்த வகையில் நேற்று பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக மதிய உணவை சாலையில் அமர்ந்து உட்கொண்டார்.

இதுகுறித்து, காஞ்சீபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, திருக்காலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் நிலம் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. மஞ்சள் நீர் கால்வாய் அருகேயுள்ள 5 ஏக்கர் கோயில் நிலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.


Next Story