கூடலூர் அருகே அரசு பள்ளி, தபால் நிலையம், நூலகத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூர் அருகே அரசு பள்ளி, தபால் நிலையம், நூலகத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
கூடலூர்
கூடலூர் அருகே அரசு பள்ளிக்கூடம், தபால் நிலையம், நூலகத்தை காட்டு யானைகள் கூட்டம் சேதப்படுத்தின.
காட்டு யானைகள்
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியில் அடர்ந்த வனங்கள், தேயிலை தோட்டங்கள் உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இதேபோல் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் வசித்து வருகின்றன. இதனால் காட்டு யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் புகுந்து வீடுகள் உள்ளிட்ட பொது மக்களின் உடைமைகளை சேதப்படுத்தி வருகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு பேரூராட்சிக்கு உட்பட்ட பார்வுட் பஜாரில் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் அங்கு இருந்த அரசு பள்ளிக்கூடம், தபால் நிலையம், நூலகத்தை முற்றுகையிட்டன. இதையடுத்து காட்டு யானைகள் பள்ளி கதவு, நூலகம் மற்றும் தபால் நிலையம் சேதப்படுத்தியன. தொடர்ந்து அதிகாலையில் காட்டுயானைகள் அங்கிருந்து வனப்பகுதிகள் சென்றன.
சேதப்படுத்தின
நேற்று காலை வீடுகளில் இருந்து வெளியே வந்த பொதுமக்கள் காட்டு யானைகள் அரசு பள்ளிக்கூடம், தபால் நிலையம், நூலகத்தை சூறையாடி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் வனத் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வனம் மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது நள்ளிரவில் காட்டு யானைகள் கூட்டமாக வந்து அரசு பள்ளிக்கூட வகுப்பறைகள் மற்றும் சத்துணவு அறையில் வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்றது தெரியவந்தது. மேலும் தபால் நிலையம், நூலகத்தில் இருந்த மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினது தெரியவந்தது.
பொதுமக்கள் பீதி
காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு காட்டு யானைகள் அரசு பள்ளிக்கூடம் தபால் நிலையம் நூலகத்தை சேதப்படுத்தின. தற்போது, மீண்டும் அப்பகுதிக்கு காட்டு யானைகள் கூட்டமாக வந்து சென்றது பொதுமக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே காட்டு யானைகளை கண்காணித்து, குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story