கூடலூர்-ஊட்டி இடையே குறுகலான சாலையால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்-ஊட்டி இடையே குறுகலான சாலையால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு
கூடலூர்
கூடலூர்- ஊட்டி இடையே குறுகலான சாலையால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
குறுகலான சாலை
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் சந்திக்கும் மையமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரம் உள்ளது. இதேபோல் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு ஏராளமான சரக்கு லாரிகளும் இயக்கப்படுகிறது.
இதுதவிர அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகள் உள்பட பல்வேறு அலுவலக பணிகளுக்கு தினமும் ஏராளமான மக்கள் கூடலூர் வந்து செல்கின்றனர்.
இதனால் கூடலூரில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதேபோல கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா செல்வர்கள் கூடலூர்-ஊட்டி சாலையில் செல்கின்றனர்.
இந்த சாலை கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ராஜகோபாலபுரம் பகுதி வரை மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
இந்த நிலையில் குறுகலான சாலையின் நடுவே அதிகாரிகள் தடுப்பு சுவர்கள் வைத்ததால் சாலை மிகவும் குறுகலாக மாறியுள்ளது. மேலும் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த இடவசதியும் இல்லை.
சில இடங்களில் வாகனங்களை நிறுத்த இடம் இருந்தாலும், அந்த இடத்தில் இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்து வைத்துள்ளனர்.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், போலீசாரின் கண்காணிப்பை மீறி சிலர் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி கூடலூர்-ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
தடுப்பு சுவரில் மோதிய பஸ்
இந்த நிலையில் நேற்று காலை ஊட்டியில் இருந்து தனியார் சுற்றுலா பஸ் ஒன்று கூடலூர் வந்தது. இந்த பஸ் ராஜகோபாலபுரம் பகுதியில் வந்தபோது, சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் குறுகலான சாலையில் சுற்றுலா பஸ்சை இயக்க முடியவில்லை.
தொடர்ந்து பஸ்சை இயக்க முயன்றபோது, சுற்றுலா சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சை அங்கிருந்து எடுத்து, போக்குவரத்தை சரிசெய்தனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நிரந்தர தீர்வு தேவை
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
கூடலூர்-ஊட்டி சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் தொடர்ந்து வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதற்கு மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story