ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.4½ லட்சம் பறிமுதல்


ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.4½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Dec 2021 8:28 PM IST (Updated: 2 Dec 2021 8:28 PM IST)
t-max-icont-min-icon

ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.4½ லட்சம் பறிமுதல்

குன்னூர்

ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.4½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இளநிலை உதவியாளர் உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பேரூராட்சி அலுவலகத்தில் சோதனை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள ஜெகதளா பேரூராட்சியில் அதிக இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதில் விதியைமீறி ஏராளமான கட்டிடங்கள் கட்டப்படுள்ளது. அவ்வாறு கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி பெற பேரூராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி உள்பட போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.4½ லட்சம் பறிமுதல்

அப்போது போலீசாரை கண்டதும் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை அலுவலகத்தில் இருந்து வெளியே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். 

தொடர்ந்து நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருப்பதை கண்டு பிடித்தனர். பின்னர் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.4 லட்சத்து 53ஆயிரத்து 600 இருந்தது.

இதுதொடர்பாக பேரூராட்சி இளநிலை உதவியாளர் கருமலை அப்பன் மற்றும் மற்றொரு பணியாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தனர். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் சோதனையால் ஜெகதளா பேரூராட்சி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலி மகளிர் சுய உதவிக்குழு

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறியதாவது:-
கூட்டுறவு வங்கியில் இருந்து பேரூராட்சி ஊழியர் ஒருவர் பணம் எடுப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டபோது அந்தப்பணம் பேரூராட்சி அலுவலகத்துக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினோம். இதில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் கொடுப்பதற்காக வைத்துள்ளதாக  அலுவலர்கள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அது போலி சுய உதவி குழு என தெரியவந்தது. இதனால் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story