திருச்செந்தூரில் நேற்று பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
திருச்செந்தூரில் நேற்று பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் வீடுகள் முன்பு தேங்கியுள்ள பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சாலை மறியல்
திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. சாலை மற்றும் தெருக்களில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. மழைநீர் வடிந்த நிலையில் சபாபதிபுரம் பகுதியில் பாதாளசாக்கடை கழிவுநீர் வீடுகள் முன்பு தேங்கியது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.
கழிவுநீர் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள் கழிவுநீரை உடனடியாக அகற்ற வலியுறுத்தி சபாபதிபுரம்-தெற்குரதவீதி சந்திப்பில் நேற்று காலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி, சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பாபு, சுகாதார இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் முருகன், கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
பின்னர், போராட்டம் நடத்தியவர்கள் தரப்பில் 5 பேரிடம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. தாசில்தார் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை சிறு சிறு பிரச்சனை ஏற்படும். பொதுமக்கள் உடனடியாக மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. பொதுமக்கள் பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story