விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்


விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Dec 2021 9:17 PM IST (Updated: 2 Dec 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றக்கோரி விழுப்புரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. இந்த மழைகாரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மழை ஓய்ந்து கடந்த 2 நாட்களாக சூரியன் தலைகாட்ட தொடங்கியபோதிலும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த தண்ணீர் இன்னும் வடியாததால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். குறிப்பாக விழுப்புரம் தேவநாதசாமி நகர், கம்பன் நகர், ஆசிரியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றிலும் தேங்கியிருந்த தண்ணீர் இன்னும் வடியவில்லை, அந்த தண்ணீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்தினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதனால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று மாலை 5.45 மணியளவில் கம்பன் நகர் மெயின்ரோடு பகுதியில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடியிருப்புகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மாலை 6 மணியளவில் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

Next Story