ரெயில் பயணிகளுக்கு தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல்லில், ரெயில் பயணிகளுக்கு தீ விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திண்டுக்கல்
வடமாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து ரெயில் பயணிகளுக்கு தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன்படி மதுரை கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு, தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு அளிக்க இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான குழுவை அமைத்தார். இந்த குழுவினர், மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த குழுவினர் நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கு 3-வது நடைமேடையில் ரெயில் பயணிகளுக்கு தீ விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் ரெயில் பெட்டிகளில் இருக்கும் தீயணைப்பு கருவியை பயன்படுத்தி, ரெயிலில் ஏற்படும் தீயை அணைப்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பையா, வெற்றிமணி, ரெயில்வே பாதுகாப்பு படையினர், பயணிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story