நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது


நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2021 10:28 PM IST (Updated: 2 Dec 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாடிக்கொம்பு

தாடிக்கொம்பு அடுத்த இ.பி.காலனி ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் துரை. இவர் அரசு போக்குவரத்துக்கழகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா (வயது 55) அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

கடந்த 30-ந்தேதி ஆசிரியை சுஜாதா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சுஜாதாவை சோபாவில் கட்டி போட்டனர். 

பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தாடிக்கொம்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரபீக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். 

இதில் சம்பவத்தன்று அந்த பகுதியில் கரூர் மாவட்டம் ஆதனூர் பால்மடையை சேர்ந்த மதன்குமார் (25), திருச்சி மிளகுப்பாறையை சேர்ந்த சிவா(24), திண்டுக்கல் பொன்னகரம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி(36), பர்மா காலனியை சேர்ந்த சுரேஷ் (32) ஆகிய 4 பேர் நடமாடியது தெரியவந்தது.

 இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து துருவித்துருவி விசாரித்தனர். இதில் அவர்கள் சுஜாதா வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்பு கொண்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 7 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மீட்கப்பட்டது.

Next Story