தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசு கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசு கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு
நாமக்கல்:
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் குறித்து தகவல் அளித்தால் பரிசு வழங்கப்படும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை தமிழக அரசு, கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவு பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.
இந்த தடை ஆணையை செயல்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஆய்வுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து மூடுதல் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
தகவல் அளித்தால் பரிசு
இருப்பினும் குடியிருப்பு, வணிக நிறுவனங்களுக்குள் ஒரு சிறிய இடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் இத்தகைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை அடையாளம் காண்பது கடினமாக உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்ட விரோதமாக இயங்கும் அத்தொழிற்சாலைகள் குறித்த தகவலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தெரிவிக்கலாம்.
சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதில் பங்களிக்கும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பொதுமக்களுக்கு, அவர்களின் பங்களிப்பிற்காக பாராட்டும், பரிசும் அளிக்கப்படும். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசிய தன்மை கண்டிப்பாக பராமரிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story