கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: கூடுதல் தண்டனை பெற்ற வாலிபர் சிறையில் அடைப்பு


கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: கூடுதல் தண்டனை பெற்ற வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 2 Dec 2021 10:57 PM IST (Updated: 2 Dec 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கூடுதல் தண்டனை பெற்ற வாலிபர் அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை:
கொலை வழக்கு
புதுக்கோட்டை மச்சுவாடி சிவானந்தபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கருப்பையா மகன் பாரதிதாசன் (வயது 32). இவர் மீதான கொலை வழக்கு ஒன்றில் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து  மதுரை ஐகோர்ட்டில் பாரதிதாசன் மேல்முறையீடு மனு செய்தார். இதில் அவரது குற்றத்தை உறுதி செய்து தண்டனையை 7 ஆண்டுகளாக உயர்த்தி கடந்த செப்டம்பர் மாதம் 20-ந் தேதி ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், பாரதிதாசன் கோர்ட்டில் அப்போது ஆஜராகவில்லை. 
சிறையில் அடைப்பு 
இதனால், அவரை கைது செய்ய புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பாரதிதாசனை கைது செய்த கணேஷ்நகர் போலீசார், மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story