38 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


38 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 2 Dec 2021 11:19 PM IST (Updated: 2 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே இரண்டு லாரிகளில் கடத்தப்பட்ட 38 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு லாரி டிரைவர்கள் 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்
திருப்பூர் அருகே இரண்டு லாரிகளில் கடத்தப்பட்ட 38 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததோடு லாரி டிரைவர்கள் 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரிசி மூட்டைகள்
திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்களை தடுக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இசக்கி, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் நேற்று மதியம் குண்டடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசிகள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர்.
2 டிரைவர்கள் கைது
விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 39) என்பது தெரியவந்தது. சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசி வாங்கி மொத்தமாக பதுக்கி வைத்து பின்னர் கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. அந்த லாரியில் இருந்து 18 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் குண்டடம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வந்த மற்றொரு லாரியை பிடித்தனர். டிரைவரை பிடித்து விசாரிக்கையில் அவர் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (48) என்பது தெரியவந்தது. அந்த லாரியில் இருந்து 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்பாக செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story