விராலிமலை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ராஜகிரி பெரியகுளம் பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாட்டம்
விராலிமலை அருகே 15 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகிரி பெரியகுளம் நிரம்பியது. பட்டாசு வெடித்து இளைஞர்கள் கொண்டாடினர்.
ஆவூர்:
ராஜகிரி பெரியகுளம்
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை இயல்பை விட அதிகமான அளவில் பெய்து வருகிறது. அதேபோல விராலிமலை ஒன்றிய பகுதிகளிலும் பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் உள்ள அனைத்து குளம், குட்டை, ஏரி, கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உபரி நீரானது கலிங்குகள் வழியாக கடந்த 2 வாரங்களாக வெளியேறி வருகிறது.
இதில் விராலிமலை ஒன்றியம் ராஜகிரி பெரியகுளம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி கலிங்கு வழியாக உபரிநீர் வெளியேறி வருகிறது. சுமார் 2 கிலோ மீட்டர் நீளமும், 750 ஏக்கர் பரப்பளவும் 4 குழுமிகளும் கொண்ட ராஜகிரி பெரிய குளத்தின் மூலம் சுமார் 1,300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பியது
இந்த குளம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பியது. இந்த வருடம் பெய்த தொடர் மழையால் இலுப்பூர் மற்றும் மலைக்குடிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பி அதன் உபரி நீரானது காட்டாறு வழியே ராஜகிரி பெரிய குளத்திற்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அதிக அகலமும் ஆழமும் கொண்ட ராஜகிரி குளமானது நிரம்பி தற்போது அதன் முழு கொள்ளளவை எட்டி உபரி நீரானது சுமார் 300 அடி நீளமும், 40 அடி ஆழமும் கொண்ட கலிங்கு வழியாக வெளியேறி வருகிறது.
வெளியேறும் உபரி நீரானது குற்றால மலைப்பகுதியில் இருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி போல கொட்டி வருகிறது. 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி நீர்வீழ்ச்சி போல வெளியேறும் உபரி நீரை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், இளைஞர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மலர் தூவி வரவேற்பு
இளைஞர்கள் அங்கு பட்டாசு வெடித்தும், ஆனந்த குளியல் போட்டும் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக ஊர் பொதுமக்கள் சார்பில் கலிங்கில் இருந்து வெளியேறும் உபரி நீரில் மலர் தூவி வரவேற்றனர். ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய இந்த குளத்தின் 40 அடி உயர கலிங்கு போல புதுக்கோட்டை மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story