கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தாய்மொழியானது மாநில அரசின் அலுவல் மொழியாகவும், மாநில அரசின் கீழ் இயங்கும் கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாகவும், மாணவர்களுக்கு மொழிப்பாடம் எனும் பிரிவில் முதன்மை மொழிப்பாடமாகவும், சில மாநிலங்களில் தாய்மொழியானது கட்டாய பாடமாகவும் இருந்து வருகிறது.
இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் பட்டியலான 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள அந்தந்த பகுதி மக்களின் தாய்மொழி என்பது மொழிப்பாடத்தில் ஒரு பாடமாக கற்பிக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
மத்திய அரசு அல்லது மாநில அரசின்கீழ் இயங்கும் பள்ளிகளில் அந்தந்த மண்ணின் மைந்தர்களான மாணவர்களுக்கு கல்வி சார்ந்த அனைத்து சேவைகளையும் வழங்குவது தான் அரசுகளின் கடமை. ஆனால் மக்களின் வரிப்பணத்தில் கல்வி நிலையங்களை அமைத்துவிட்டு, அவர்களின் பிள்ளைகளுக்கு தங்கள் தாய்மொழியை மொழிப்பாடமாக கற்கும் வாய்ப்பை வழங்காதது அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும்.
தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் இந்தி மொழிதான் பிரதானமாக வைக்கப்பட்டு உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிப்பவர்களில் 95 சதவீத மாணவர்கள் இந்தி, சமஸ்கிருதம் தெரியாதவர்கள். எனவே தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்தநிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் ஆகியோர் நேற்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story