ஆம்புலன்ஸ் மீது பஸ் ேமாதிய விபத்தில் காயம் அடைந்த ஊழியர் சாவு
ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதிய விபத்தில் காயம் அடைந்த ஊழியர் நடராஜ் பரிதாபமாக இறந்தார்.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நடந்த விபத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனமும், தனியார் பஸ்சும் மோதி கொண்டன. இதில் வேடசந்தூர் அரசு மருத்துவமனை சித்தா மருத்துவ பிரிவில் பணிபுரியும் ஊழியர் சுமதி, வேடந்தூரை சேர்ந்த நடராஜ்(48) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் நடராஜூக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மதுரை அரசு மருத்துவமனையில் சாக்கடை அடைப்புக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மருத்துவமனை வளாகத்தில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும். மழைக்கால நோய்களை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட சுகாதாரத்துறை நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. காய்ச்சல்-இருமல் மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் வகையில் தன்னார்வலர்களை, குடியிருப்போர் சங்கங்களை ஒருங்கிணைத்து, விடுபட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதனைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஊழியர் சுமதியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன், அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், டீன் ரத்தினவேல் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நடராஜ் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இறந்ததால் உயிரிழப்பின் எண்ணிக்ைக 3 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story