வாலிபரை தாக்கிய 4 போலீசார் பணி இடைநீக்கம்
கலபுரகியில் வாலிபரை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த 4 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு ஆகி உள்ளது.
கலபுரகி: கலபுரகியில் வாலிபரை கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த 4 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு ஆகி உள்ளது.
வாலிபருக்கு சித்ரவதை
கலபுரகி டவுன் சவுக் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் துண்டப்பா ஜமதார் (வயது 30). இந்த நிலையில் கடந்த மாதம் (நவம்பர்) 24-ந் தேதி சேடம்-கலபுரகி சாலையில் துண்டப்பா நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சவுக் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் துண்டப்பாவிடம் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்று கூறி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் போலீஸ் நிலையத்தில் வைத்து துண்டப்பாவை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர்கள் கட்டி வைத்து அடித்து, உதைத்தாக தெரிகிறது. மேலும் துண்டப்பாவை அவர்கள் பல்வேறு வழிகளில் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் துண்டப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
4 போலீஸ்காரர்கள் இடைநீக்கம்
இந்த நிலையில் வழக்கு ஒன்றில் துண்டப்பாவை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று அடித்து, உதைத்ததுடன், சித்ரவதையும் செய்து உள்ளனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் துண்டப்பா சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலபுரகி போலீஸ் கமிஷனர் ரவிக்குமாரிடம், துண்டப்பாவின் உறவினர்கள் புகார் அளித்தனர்.
அந்த புகாரின்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் துண்டப்பா மீது எந்த தவறும் இல்லாதது தெரியவந்தது. அவரை போலீசார் வேண்டும் என்றே போலீஸ் நிலையம் அழைத்து சென்று அடித்து, உதைத்து தாக்கி சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சவுக் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீது அந்த போலீஸ் நிலையத்திலேயே வழக்குப்பதிவு ஆகி உள்ளது. அதுபோல போலீஸ்காரர்கள் ராஜ்குமார், உமேஷ், கேசுவராவ், அசோக் ஆகிய 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story