ஆத்தூர் அருகே கழுத்தை நெரித்து விவசாயி கொலை: 8 மாதங்களுக்கு பிறகு உடலை தோண்டும் பணி தீவிரம் பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை


ஆத்தூர் அருகே கழுத்தை நெரித்து விவசாயி கொலை:  8 மாதங்களுக்கு பிறகு உடலை தோண்டும் பணி தீவிரம் பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2021 2:16 AM IST (Updated: 3 Dec 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே விவசாயி ஒருவர் கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு உடலை கொலையாளிகள் புதைத்துள்ளனர். அந்த விவசாயியின் உடலை 8 மாதங்களுக்கு பிறகு போலீசார் தோண்டி எடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஆத்தூர், 
விவசாயி
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாகவுண்டம்பட்டி கிராமம் மேற்கு வளவு பகுதியை சேர்ந்தவர் சுப்பு என்கிற சுப்பிரமணி (வயது 74), விவசாயி. திருமணமாகாத இவருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அரியாகவுண்டம்பட்டி கிராமத்திலும், சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூரை அடுத்த சிவகங்கைபுரம் என்ற இடத்திலும் உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் சுப்பிரமணியை காணவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சித்தப்பா மகளான சென்னையில் வசிக்கும் கனகம்  நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி காணாமல் போனது குறித்து புகார் கொடுத்தார். அதன்பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். 
போலீசார் விசாரணை
மேலும் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சுப்பிரமணி உபயோகப்படுத்திய செல்போன் கடைசியாக ஆத்தூர் அருகே உள்ள சிவகங்கை புரத்தில் உபயோகப்படுத்தப்பட்டு பின்னர் அது செயலிழந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிவகங்கைபுரத்தில் தான் கடைசியாக விவசாயி சுப்பிரமணி இருந்தது தெரியவந்தது.
கடந்த மார்ச் மாதம் சிவகங்கைபுரம் கிராமத்தில் உள்ள விவசாய நிலம் 7½ ஏக்கரை கல்பகனூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்துக்கு விலை பேசி ரூ.10 லட்சத்தை சுப்பிரமணி முன்பணமாக பெற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக ஆத்தூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த சொத்தை பெருமாள் மீதி பணமான  ரூ.1 கோடியே 17 லட்சத்தை கொடுத்து வாங்காத நிலையில் சுப்பிரமணியை காணவில்லை என்பதால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 
2 பேரை பிடித்து விசாரணை
இதையடுத்து பெருமாளுடன் பழகி வந்த செல்லியம்பாளையத்தை சேர்ந்த ராமதாஸ் (34), சக்திவேலு (33)  ஆகிய 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 
அப்போது தான் அவர்கள், சுப்பிரமணிக்கு மனைவி, குழந்தைகள் இல்லாததால், அவரை தீர்த்து கட்டிவிட்டு அந்த நிலத்தை அபகரிக்க திட்டமிட்டது தெரியவந்தது. 
இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சுப்பிரமணியை சிவகங்கைபுரத்திற்கு அழைத்து வந்த பெருமாள் தரப்பினர் அவரை கழுத்தை நெரித்துக்கொன்று உடலை அதே பகுதியில் புதைத்தது தெரியவந்தது. தொடர்ந்து நாமகிரிப்பேட்டையில் முதியவர் மாயம் வழக்கை ஆத்தூர் புறநகர் போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து பிடிபட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.  இதில் சக்திவேலுவுக்கு சொந்தமான நிலத்தின் அருகே விவசாயி சுப்பிரமணி உடல் புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசாரிடம் அவர்கள் கூறினார்.
உடலை தோண்டி எடுக்கும் பணி
இதைத்தொடர்ந்து நேற்று ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், ஆத்தூர் தாசில்தார் மாணிக்கம், ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சக்திவேல் மற்றும் ஏராளமான போலீசார் விவசாயி சுப்பிரமணி புதைக்கப்பட்டதாக பிடிபட்டவர்கள் தெரிவித்த இடத்திற்குசென்றனர். 
அங்கு குழிதோண்டி பார்த்த போது அந்த இடத்தில் உடலை காணவில்லை. இதைத்தொடர்ந்து அதன் அருகே 2 இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டும் பணி தீவிரமாக நடந்து வந்தது. மாலை வரை விவசாயி சுப்பிரமணி உடல் கிடைக்கவில்லை. இதனால் அந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய காத்திருந்த டாக்டர் கோகுலராமன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 
இதையடுத்து உடலை தோண்டி எடுக்கும் பணி நேற்று மாலை நிறுத்தப்பட்டது. இன்று(வெள்ளிக்கிழமை) இந்த பணி தொடர்ந்து நடைபெறும் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் சுப்பிரமணியை சிவகங்கைபுரத்திற்கு பெருமாள் தரப்பினர் அழைத்து வந்துள்ளனர். அங்கு அவருக்கு மதுகுடிக்க கொடுத்து, கோழிக்கறி வறுத்துக் கொடுத்து சாப்பிட வைத்தனர். பின்னர் அவரை மிரட்டி அடித்து உதைத்து அவரிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு அந்த கும்பல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து சக்திவேலுவின் விவசாய நிலத்திற்கு செல்லும் வழியில் குழி தோண்டி புதைத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் பெருமாள் ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடினார். பின்னர் அந்த பத்திரத்தில் சுப்பிரமணி ரூ.1 கோடியே 17 லட்சம் பெற்றுக்கொண்டதாக பெருமாள் எழுதிக் கொண்டார். இதையடுத்து நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டிக்கு பத்திரத்தை கொண்டு சென்று சுப்பிரமணி கிரையம் செய்வதற்கு வருவதாக கூறினார், ஆனால் வரவில்லை. இதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்றால் நாங்கள் கிரையம் செய்யப்போகிறோம் அவருக்கு மீதி கொடுக்க வேண்டிய ரூ.1 கோடியே 17 லட்சம் கொடுத்து விட்டோம் என அரியாகவுண்டம்பட்டியில் சொல்லிவிட்டு வந்து விட்டார். 
அவர் கூறிச்சென்ற பிறகு தான் சுப்பிரமணியின் உறவினர்களுக்கு சந்தேகம் வலுக்கவே அவர்கள் பெருமாள் தரப்பினரை விசாரிக்க வேண்டும் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர். அதன்பேரில் பெருமாள் தரப்பை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது தான் அவர்கள் சுப்பிரமணியை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.

Related Tags :
Next Story