கன்னட நடிகர் சுதீப்புக்கு கோவில் கட்டும் ரசிகர்கள்
ராய்ச்சூர் அருகே கன்னட நடிகர் சுதீப்புக்கு ரூ.15 லட்சத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி வருகிறார்கள். அங்கு நேற்று சுதீப்பின் 4 அடி உயர சிலை நிறுவப்பட்டது.
ராய்ச்சூர்: ராய்ச்சூர் அருகே கன்னட நடிகர் சுதீப்புக்கு ரூ.15 லட்சத்தில் ரசிகர்கள் கோவில் கட்டி வருகிறார்கள். அங்கு நேற்று சுதீப்பின் 4 அடி உயர சிலை நிறுவப்பட்டது.
நடிகர் சுதீப்புக்கு கோவில்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் ‘கிச்சா’ சுதீப். இவர் தமிழில் நடிகர் விஜயின் புலி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இவர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளமாக உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சுதீப்புக்கு அவரது ரசிகர்கள் கோவில் கட்டியுள்ளனர்.
அதாவது, கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிரவாரா தாலுகா குரகுந்தா கிராமத்தில் தான் நடிகர் சுதீப்புக்கு கோவில் கட்டப்பட்டு உள்ளது. 30-க்கு 40 சதுர அடி அளவில் இந்த கோவில் கட்டப்படுகிறது.
4 அடி உயர சுதீப் சிலை
இந்த நிலையில் இந்த கோவிலில் நடிகர் சுதீப் மற்றும் வால்மீகி மகரிஷி சிலை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. தற்போது அந்த கோவில் தூண்கள் அமைத்து முதல் தளம் மட்டும் கட்டப்பட்டுள்ளது.
இதில் நேற்று நடிகர் சுதீப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை 4 அடி உயரம் கொண்டது. அத்துடன் 6 அடி உயரம் கொண்ட வால்மீகி மகரிஷி சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் மதிப்பீடு
இந்த கோவில் மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கட்டும் பணி கடந்த 75 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள், கண்ணாடி இழைகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்காக சுதீப்பின் ரசிகர்களும், கிராம மக்களும் சொந்த செலவில் பணம் போட்டும், நிதி திரட்டியும் இந்த கோவிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புனித் ராஜ்குமார் புகைப்படம்
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நடிகர் சுதீப் திரைநாயகன் மட்டுமல்ல நிஜத்திலும் நாயகன். அவர் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகள் செய்து வருகிறார். இதனால் அவரை கவுரவிக்கும் விதமாக கோவில் கட்டி வருகிறோம். இன்னும் சில மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும். இந்த கோவிலை நாங்கள் நடிகர் சுதீப்பின் அனுமதி பெற்றே கட்டி வருகிறோம். அவர் கையால் இக்கோவிலை திறக்க முடிவு செய்துள்ளோம் என்றனர்.
இக்கோவிலுக்கு சுதீப் மூர்த்தி கோவில் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருடன், சுதீப் உள்ள புகைப்படம் வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story