காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்


காவிரி-குண்டாறு திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது; பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Dec 2021 2:51 AM IST (Updated: 3 Dec 2021 2:51 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது பிரச்சினை தீரும் வரை காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஜல்சக்தித்துறை மந்திரியிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார்.

பெங்களூரு: மேகதாது பிரச்சினை தீரும் வரை காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஜல்சக்தித்துறை மந்திரியிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார்.

மேகதாது பிரச்சினை

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அங்கு ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு ஜல்சக்தித்துறை மந்திரியிடமும், சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட அனுமதி அளிக்குமாறு சுகாதாரத்துறை மந்திரியிடமும் பசவராஜ் பொம்மை கோரிக்கை விடுத்தார். 

ஜல்சக்தித்துறை மந்திரியிடம், மேகதாது பிரச்சினை தீரும் வரை தமிழ்நாட்டின் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லி வந்தேன். இந்த நேரத்தை வீணடிக்க கூடாது என்ற நோக்கத்தில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினேன். முதலில் ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்தேன். அவரிடம், பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறு கோரினேன். வருகிற 6-ந் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் உள்ளது. அதில் ஆலோசித்து முடிவை அறிவிக்குமாறு கேட்டேன். இதற்கு சாதகமான பதிலை கூறியுள்ளார்.

காவிரி-குண்டாறு இணைப்பு

கிருஷ்ணா மேலணை திட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும் என்று கூறினேன். கோதாவரி-காவிரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தும் முன்பு கர்நாடகத்தின் ஆலோசனையை கேட்குமாறு கூறினேன். மேகதாது திட்ட பிரச்சினை தீரும் வரை தமிழ்நாட்டில் காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கோரினேன். அதுபற்றி விரிவாக ஆலோசனை நடத்தினேன்.

அதைத்தொடா்ந்து சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்தித்து பேசினேன். அவரிடம் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் குறித்து ஆலோசனை நடத்தினோம். கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாகவும், தடுப்பூசி செலுத்தும் பணியை இதே வேகத்தில் மேற்கொள்ளும்படியும் கூறினார்.

உரம் ஒதுக்கீடு

சுகாதார பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட அனுமதி வழங்குமாறு கேட்டேன். இதுகுறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பதாக கூறினார். கேரளாவில் இருந்து வருபவர்களை சரியான முறையில் நிர்வகிப்பதாகவும் அவர் பாராட்டினார். அவர் உரத்துறை மந்திரியாகவும் இருக்கிறார். அதனால் அவரிடம் கூடுதல் உரம் ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டேன். குறிப்பாக 48 ஆயிரம் டன் டி.ஏ.பி.யை கூடுதலாக வழங்குமாறு கோரிக்கை விடுத்தேன். இதை அவர் ஏற்றுக்கொண்டார்.

கர்நாடக மேல்-சபை தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக எடியூரப்பா மற்றும் குமாரசாமி ஆகியோர் இறுதி முடிவு செய்வார்கள். ரமேஷ் ஜார்கிகோளி, தன்னை பா.ஜனதாவில் ஒழித்துக்கட்ட முயற்சி நடப்பதாக கூறியது குறித்து நான் கருத்து எதுவும் கூற மாட்டேன். அவர் அவ்வாறு ஏன் கூறினார் என்று தெரியவில்லை. அவரிடம் பேசுகிறேன்.

தடுப்பூசி டோஸ்கள்

தொடர் மழை காரணமாக மலைநாடு பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு கூடுதலாக தடுப்பூசி டோஸ்கள் ஒதுக்கப்படும். எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வை கொலை செய்ய நடந்த சதி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் கமிஷனர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story