தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகளை சென்னை ஐ.ஐ.டி.பேராசிரியர் குழுவினர் ஆய்வு
தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகளை சென்னை ஐ.ஐ.டி.பேராசிரியர் குழுவினர் ஆய்வு
திசையன்விளை:
திசையன்விளை அருகே தண்ணீரை உள்வாங்கும் அதிசய கிணறுகளை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அதிசய கிணறுகள்
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நம்பியாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் வடக்கு விஜயநாராயணம் உள்ளிட்ட குளங்கள் நிரம்பி, திசையன்விளை அருகே ஆயன்குளம் படுகைக்கும், அதன் அருகில் உள்ள 2 கிணறுகளுக்கும் தண்ணீர் சென்றன.
சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணறுகளுக்கு செல்லும் தண்ணீர் மூலம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயருகிறது. மேலும் இந்த கிணறுகளுக்கு எவ்வளவு தண்ணீர் சென்றாலும் உள்வாங்கி கொண்டே இருக்கிறது. இதனால் இந்த அதிசய கிணறுகளை அப்பகுதியினர் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
ஆய்வு
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், ஆயன்குளம் படுகை அருகில் உள்ள 2 கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளன. எனினும் கிணறுகளுக்குள் தண்ணீரை உள்வாங்குவதால் சுழன்றவாறு நீரோட்டம் உள்ளே செல்கிறது.
இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. புவியியல் துறை பேராசிரியர் வெங்கட்ரமண சீனிவாசன், சென்னை அண்ணா பல்கலைக்கழக கணேஷ்பாபு ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆயன்குளம் படுகை அருகில் உள்ள அதிசய கிணறுகளை பார்வையிட்டனர்.
அதிசய கிணறுகளின் ஆழத்தை நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்தனர். பின்னர் அருகில் உள்ள மற்ற கிணறுகளின் ஆழம், நீர்மட்டத்தையும் அளவீடு செய்தனர். அதிசய கிணறுகள் பற்றி அப்பகுதி விவசாயிகளிடமும் கேட்டறிந்தனர்.
தாசில்தார் செல்வக்குமார், கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story