சென்னை தண்டையார்பேட்டையில் சோகம்: எந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் தொழிலாளி பலி


சென்னை தண்டையார்பேட்டையில் சோகம்: எந்திரத்தில் தலைமுடி சிக்கி பெண் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 3 Dec 2021 3:03 PM IST (Updated: 3 Dec 2021 3:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எந்திரத்தில் தலைமுடி சிக்கியதால் பெண் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

திருவொற்றியூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை மன்னப்ப தெருவைச் சேர்ந்தவர் முகமது அஸ்ரப். இவருடைய மனைவி அஜ்மா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

அஜ்மா, தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அஜ்மா, பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் இடத்தில் உள்ள எந்திரத்தின் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அஜ்மா அணிந்து இருந்த துப்பட்டா அங்குள்ள அரவை எந்திரத்தில் சிக்கியது. இதனால் துப்பட்டா மளமளவென எந்திரத்தில் சுற்றியதுடன், அவரது தலை முடியையும் எந்திரம் பற்றி இழுத்தது. எந்திரத்தில் சிக்கியதால் தலையில் பலத்த காயம் அடைந்த அஜ்மா, வலியால் அலறி துடித்தார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள், உடனடியாக எந்திரத்தை நிறுத்திவிட்டனர்.

பின்னர் உயிருக்கு போராடிய அஜ்மாவை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அஜ்மா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story