கேசவபுரம் அணையில் இருந்து தண்ணீர் வரத்தால் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கேசவபுரம் அணையில் இருந்து தண்ணீர் வரத்தால் பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழைநீர், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர், பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மா பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் பாலாறு அணையில் இருந்து வந்து சேரும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படுவதும், நீர்வரத்து குறையும்போது தண்ணீர் வெளியேற்றம் குறைக்கும் நடவடிக்கைகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று முன்தினம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏரியில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் பாலாறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் காவேரிப்பாக்கம், கேசவபுரம் வழியாக பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
நேற்று இரவு 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 34.15 அடியாக பதிவானது. 2.870 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 12 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து மதகுகள் வழியாக 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.
Related Tags :
Next Story