திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே ஆற்றை கடக்க வசதியாக பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தண்டலம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் கடம்பத்தூர் செல்ல வேண்டுமானால் தண்டலம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக தண்டலம் கசவநல்லாத்தூர் இடையே செல்லும் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக தண்டலம், தண்டலம் கண்டிகை, தண்டலம் காலனி போன்ற பகுதிகளை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், நோயாளிகள், முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடம்பத்தூர் செல்ல வழி இல்லாததால் பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர் என 8 கிலோமீட்டர் தொலைவுக்கு சுற்றி சென்று கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.
அதனால் பயண நேரமும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்டலம் கசவநல்லாத்தூர் இடையே செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பாலம் அமைத்து தரவேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story