தூத்துக்குடியில் 8 நாட்களாக தேங்கி கிடக்கும் தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடந்தது வருகிறது
தூத்துக்குடியில் 8 நாட்களாக தேங்கி கிடக்கும் தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடந்தது வருகிறது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகர பகுதியில் 8 நாட்களாக தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை நேற்று கலெக்டர் செந்தில்ராஜ், சண்முைகயா எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர். .
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து உள்ளது. கடந்த 25-ந் தேதி பெய்த மழையால் மாவட்டத்தில் பல இடங்களில் மழை வெள்ளம் ஆறாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
மழைநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். முத்தம்மாள் காலனி, ரகுமத்நகர், ஆதிபராசக்தி நகர், தனசேகரன் நகர், பூப்பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராட்சத மோட்டார்கள்
ஏற்கனவே மாநகராட்சி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரகுமத்நகர், ராம்நகர் பகுதிகளில் உள்ள மழைநீரை வெளியேற்றுவதற்காக ரூ.50 லட்சம் மதிப்பில் 56 எச்.பி. திறன் கொண்ட 5 மோட்டார்கள், 30 எச்.பி. திறன் கொண்ட 2 மோட்டார்கள் வாங்கப்பட்டு உள்ளன.
இந்த ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் முத்தம்மாள் காலனி பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் இருந்து மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறவில்லை. ஆகையால் விரைந்து மழைநீரை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கனிமொழி எம்.பி. ஆலோசனை
முன்னதாக புதிதாக வாங்கப்பட்டு உள்ள மோட்டார்களை கனிமொழி எம்.பி. பார்வையிட்டார். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
Related Tags :
Next Story