ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டியின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம்
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டியின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் நெடுகுளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூதாட்டியின் உடலை வைத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் நெடுகுளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த மூதாட்டி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளாவில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் நெடுகுளா மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நெடுகுளாவை சேர்ந்த ராஜூ என்பவரது மனைவி மிச்சியம்மாள்(வயது 60) உடல் நலக்குறைவால் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு டாக்டர், செவிலியர் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பிரசவத்துக்கு மட்டுமே 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும், பிற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படாது, எனவே கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று மருத்துவ ஊழியர்கள் கூறியதாக தெரிகிறது.
போராட்டம்
பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வாகனம் வர காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு கோத்தகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மூதாட்டி கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், மிச்சியம்மாள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடலை கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால்தான் மிச்சியம்மாள் உயிரிழந்துவிட்டதாக கூறி மருத்துவ ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவசர சிகிச்சை அளிக்க இரவு நேர டாக்டர், செவிலியர்களை பணியமர்த்த வேண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து குன்னூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், வருவாய் ஆய்வாளர் சகுந்தலா, கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மிச்சியம்மாளின் உடலை எடுத்துக்கொண்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story