கேரள, கர்நாடக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு


கேரள, கர்நாடக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 7:56 PM IST (Updated: 3 Dec 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

‘ஒமைக்ரான்’ தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேரள, கர்நாடக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணி நடத்தப்படுகிறது என்று நீலகிரி கலெக்டர் கூறினார்.

ஊட்டி

‘ஒமைக்ரான்’ தொற்று அச்சுறுத்தல் காரணமாக கேரள, கர்நாடக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு பணி நடத்தப்படுகிறது என்று நீலகிரி கலெக்டர் கூறினார்.

தீவிர கண்காணிப்பு 

நீலகிரி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித், ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் இருக்க முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

குறிப்பாக தற்போது உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கேரள எல்லையில் உள்ள நாடுகாணி, சோலாடி, தாளுர், பாட்டவயல் ஆகிய சோதனைச்சாவடிகளிலும், கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லாவிலும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெறுகிறது.

8 நாட்கள் வீட்டு தனிமை

இது தவிர பர்லியாறு, குஞ்சப்பனை சோதனைச்சாவடிகளிலும் தீவிர சோதனை நடக்கிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, அதில் வருபவர்களுக்கு தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தொற்று அறிகுறி இருந்தால், அவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட வெளிநாடுகளில் இருந்து நீலகிரிக்கு யாரும் வரவில்லை. கோவை, மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து வரும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பயணிகளின் பட்டியல் மருத்துவக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து அவர்கள் 8 நாட்களுக்கு வீட்டு தனிமையில் வைக்கப்படுவார்கள். 

முதல் இடத்தில் நீடிக்கிறது

நீலகிரியில் தினமும் 1,600 பேரில் இருந்து 1,800 பேர் வரை சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 9 லட்சத்து 2 ஆயிரத்து 169 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் குன்னூர், கூடலூர், கோத்தகிரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் 387 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. 

இதில் 348 ஆக்சிஜன் படுக்கை வசதிகள், 39 அவசர சிகிச்சை படுக்கை வசதிகள் அடங்கும். முதல் தவணை தடுப்பூசி 5 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 48 ஆயிரத்து 50 பேருக்கும் செலுத்தப்பட்டு தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக தொடர்ந்து நீடிக்கிறது. நாளை(இன்று) 299 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story